சாலமன் பாப்பையா பேசிக் கொண்டுதான் இருப்பார்….!

இலக்கியம் என்பது படித்தவர்களுக்கானது என்பதை மாற்றி இல்லை… இல்லை அது பாமர மக்களுக்குமானது என்றாக யாவரும் புரியும் இரசிக்கும் வடிவத்தில் மாற்றியமைத்தவர் ஐயா சாலமன் பாப்பையா.

இதற்கான மாற்றத்திற்கான அடிக்கல்லை நாட்டியவர் உயரங்களைத் தொடும் பேச்சு மனைகளை கட்டியவர் சாலமன் பாப்பையா என்பதை யாரும் மறுக்க முடியாது.

புராணம் இதிகாசம் ஆன்மீகம் என்றாக நடைபெற்று வந்த பட்டி மன்றத்தை சமூகப் பிரசனைகள் என்றாக அன்றாட மக்கள் சந்திக்கும் விடயங்களை உள்ளடக்கியதாக அமைத்து எல்லோருக்கும் பொதுவானதாக மாற்றியவர் ஐயா என்றால் மிகையாகாது.

இதற்குள் சமூகத்திற்கு தேவையான முற்போக்கு கருத்துகள் நிச்சயம் இருக்கும்.

தவத்திரு குன்றக்குடி அடிகளாரால் சமூகத்திற்கான பட்டிமன்றப் பேச்சாளராக அறிமுகப்படுத்தப்பட்டு தலமையாளராக உயர்த்தப்பட்டு மரணிக்கும் வரை சுரம் மாறாது பல இராகங்களை பாடியவர் பட்டி மன்றங்கள் நடாத்தியவர்.

ஆம் அவரின் பட்டிமன்றங்கள் அப்படித்தான் அமையும் ஒரு இசைப் பிரவாக்கம் போல் பலரையும் கட்டிப் போட்டுவைக்கும்.

‘பண்டிதர்’களுக்கு மட்டுமே உரியதாக இருந்த இலக்கியப் பட்டிமன்றங்களை, சாதாரண மக்களும் ரசிக்கும்படி குடும்ப வாழ்வியல் மற்றும் சமூகத் தலைப்புகளாக மாற்றிப் புரட்சி செய்தார் என்பது அவரின் பட்டி மன்றங்களை கேட்பவர்களின் தீர்பாகும்.

ஒரே தொலைகாட்சி நிறுவனத்தில் தொடர்ச்சியாக 30 ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்ச்சிகளை தொய்வின்றி தொடர்சியாக நடாத்தியவர்.

60 ஆண்டுகாலப் பேச்சாளராக பேராசரியராக வாழ்ந்தார் என்பதை விட தமிழ் இலக்கியத்தை செதுக்கி வழப்படுத்தினார் எனலாம்.

ஏழ்மையான குடும்ப சூழலில் பிறந்து எளிமையானவராக ஒரு வேட்டி வெள்ளை சட்டை துண்டு என்றாக ஒரு சோடி உடை என்றாக எளிமையான மனிதராகவே வாழந்து காட்டியவர்.

அதனால் விளிம்பு நிலை மக்களின் பிரச்சனைகள்தான் இவரின் அடிநாதப் பேச்சாகவும் பட்டி மன்றமாகவும் அமைந்திருந்ததே அனேகமாக.

மனிதர்கள் விலங்கினங்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் சிரித்தல் புன்னகைத்தல் நகைச்சுவையாக உரையாடுதல் என்பதையும் மூலதனமாக்கி இதற்குள் ஆழமான கருத்துகளை உள்ளடக்குதல் என்றான சுவாரசியங்களை அறிவு பூர்வமாக இணைத்து தனக்கு என ஒரு ஒருவகைப் பாணியை அமைத்து தனியான குரல் வளத்தையும் இணைத்து குறியீட்டுப் பேச்சாக தன்னை எளிமைப்படுத்தி பேசியவர்.

தொலைக்காட்சி பட்டிமன்றங்கள் மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தார். நகைச்சுவை கலந்த பேச்சும், நடுநிலையான தீர்ப்புகளும் இவரது தனித்துவ அடையாளங்களாகும்.

தமிழர் திருநாள்கள் தோறும் தொலைக் காட்சியில் ஐயாவின் பட்டிமன்றத்தின் நேரலையை கேட்டு இரசிப்பதற்கு ஒரு பெரும் கூட்டத்தை காத்திருந்து குழுமி இருகச் செய்தவர்.

ஒரு வகையில் பட்டி மன்றம் ஒரு விவாத மேடைகளாக இருந்த படியால் பெண்கள் அதிகம் இதில் நேரடியாக நிகழ்வுகளில் பார்வையாளராக கலந்து கொள்வது குறைவு என்றான தமிழ்ச் சூழல் நிலவியதை உடைத்தவர்.

பட்டிமன்றம் விவாத அரங்கு பற்றி அதிகம் பெண்கள் உரையாடுவதில்லை என்றான ஆண் மேலாதக்க சிந்தனையின் வெளிப்பாடுகளை உடைத்து பெண்களை பெருந்திரளாக பார்வையாளராக கலந்து கொள்ள இணைய வைத்தவர் என்றால் அது சாலமன் பாப்பையா ஐயாவைச் சேரும்.

இதற்கு காரணம் இந்த பட்டி மன்றத்தின் கருப்பொருள் இதில் பேச்சாளர்களாக கலந்து கொள்பவர்களின் பண்பட்ட சமுதாயக் கருத்துகளைத் இணைத்து இதற்கு தலமையை அமைத்து அவர் செயற்படும் அளந்து பேசும் அந்த பண்பே பிரதான காரணமாகும்.

பெரும் பேராசியர்கள் தமிழ் அறிஞர்கள் மட்டுமே மேடையாளராக இருந்து வந்த மேடைப் பேச்சாளர் பட்டிமன்றப் பேச்சாளர் என்றாக இருந்த சூழலை உடைத்தவர். இவர்களுக்கும் அப்பால் பேச்சு வல்மையை வெளிப்படுத்தும் பலதுறைத் திறமைகளை வல்லுனர்களையும் தனது தலமையின் கீழ் பேச்சாளர்களாக மேடையாளராக உருவாக்கி அதனை அனுமதித்து வாய்பளித்த பேரறிஞர் இவர்.

இதில் மிக முக்கியமானது சம அளவில் பெண்களையும் பேச்சாளராக தனது அரங்கிற்குள் அழைத்து வந்தவர்…. வாய்ப்பளித்தவர்… வாழ்த்தியவர்…. ஊக்கப்படுத்தியவர்…..

பல்கலைக கழக, கல்லூரிப் படிப்பை முடித்த இளம் பேச்சாற்றல் உள்ள இளைஞர்களையும் அனுபவம் மிக்க பேச்சாளர்களை ஒருங்கு சேர ஒரே மேடையில் ஒரே தலைப்பில் அமர்த்தி சகலருக்கும் வாய்ப்பு என்றாக களம் கொடுத்து சமநிலையைப் பேணியவர்.

இவரின் பட்டி மன்றங்கள்தான் இரவு நேரம் சென்று 10 மணிக்கு பொது இடங்களில நடைபெற்ற போதும் குடும்பமாக பெண்களும் இணைந்து கேட்டு களித்த சம்பவங்களை அதிகரிக்கவும் செய்தது.

பட்டிமன்றத்தின் இறுதியில் தீர்ப்பு என்றாக தொகுப்பு வழங்கும் போது மேடையில் பேசப்பட்ட விடயங்கள் வெளிப்படுத்தல்களின் அடிப்படையாக வைத்து சரியான கருத்தை மேலோங்கச் செய்யும் வகையிலான தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி இவர்.

இவரின் முன்பு சமூகச் சட்டங்கள் என்றும் தோற்றுத்தான் நின்றன.

அவ்வளவு சமூக அறம் இவரின் தீர்ப்புகளில் இருக்கும்.

அவரின் பிறப்பும் வாழ்வும் இதற்கு அடிப்படையாக அமைந்ததாகவும் கொள்ளலாம்.

பிப்ரவரி 22, 1936 அன்று மதுரையில் ஒரு எளிய நெசவுக் குடும்பத்தில் பிறந்தார். சுந்தரம் – பாக்கியம் இணையருக்கு 12 பிள்ளைகளில் 9-வது மகனாகப் பிறந்தார்.

இவரது தந்தை ஒரு மில் தொழிலாளி மற்றும் எளிய நெசவாளர். வறுமையின் காரணமாகப் பள்ளிப் படிப்பை முடித்ததும் தையல் தொழில் மற்றும் மில் வேலைகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

வறுமையான சூழலிலும் கல்வியில் சிறந்து விளங்கினார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், தியாகராஜர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

அவர் பயின்ற மதுரை அமெரிக்கன் கல்லூரியிலேயே தமிழ்த்துறைப் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

அதுவரை பண்டிதர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்த இலக்கியப் பட்டிமன்றங்களை, சாதாரண மக்களும் ரசிக்கும்படி குடும்ப வாழ்வியல் மற்றும் சமூகத் தலைப்புகளாக மாற்றிப் புரட்சி செய்தார்.

தொலைக்காட்சி பட்டிமன்றங்கள் மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தார்.

நகைச்சுவை கலந்த பேச்சும், நடுநிலையான தீர்ப்புகளும் இவரது தனித்துவ அடையாளங்களாகும்.

திருக்குறளுக்கு பாமர மக்களும் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழ் உரை எழுதினார்.

கூடவே புறநானூறு புதிய வரிசை வகை, கம்பராமாயணம் உரை என்றாக நூல்களும் பல கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

திரைப் படைத்துறையில் நடிகராகவும் இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தியவர் ‘அங்கவை’ ‘செங்கவை’ ஆக…

இவரின் இத்துறை திறமைகளுக்காக தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது 2000 ம் ஆண்டு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவருக்கான இந்திய அரசின் மிக உயரிய குடிமை விருதுகளில் ஒன்றான பத்மசிறீ விருது 2021 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

பொதுவாக உரையாடல்கள் என்றான விவாதம் பட்டி மன்றம் பாட்டு மன்றம் கதை சொல்லும் மன்றம் வில்லுப்பாட்டு பிரசங்கம் என்றாக தகவல்கள் அதிகம் உள்ள அரங்கை அதிகம் தேடிப் பார்க்கும் கேட்கும் என்னைப் போன்ற பலரின் முதல் தெரிவாக ஐயா இருந்தார்.

இதனால் அவரின் 90 வயது வாழ்க்கை எமக்கு விட்டுச் செல்லும் பொக்கிசங்கள் இன்னும் வாழும். தமிழ் கூறும் நல்லுலகில் அவரின் பெயர் தமிழின் பண்பாட்டு வளர்ச்சியிற்கு வலுச் சேர்க்கும்.

அது எம்மையும் பேசவும் பழக்கும் பேசவும் வைக்கும் கைதட்டல்களை வாங்கவும் செய்யும்.

இவை அனைத்திற்குள்ளும் ஒரு பாப்பையா எம்முள் இருந்து கொண்டுதான் இருப்பார்.

ஐயாவிற்கு எமது நெஞ்சம் நிறைந்த அஞ்சலி மரியாதை வணக்கங்கள்.

Leave a Reply