ஆரம்பப் போராளிகளில் ஒருவரான சங்கானைச் சந்திரமோகன் காலமாகிவிட்டார்

எங்களோடு தமிழ் இளைஞர் பேரவை , ஆரம்பகாலத் .தமிழ் ஈழ விடுதலை இயக்கம் [TLO…-Tamil Liberation Organisasion. ] ஆகியவற்றில் இயங்கிய ஆரம்பப் போராளிகளில் ஒருவரான சங்கானைச் சந்திரமோகன் காலமாகிவிட்டார் என்ற துயரச் செய்தியை இப்போதுதான் கேள்விப்பட்டு மிகவும் கவலை கொண்டேன்….
அதிர்ந்து அதிகம் பேசாத நுட்பமான புத்திகொண்ட இவர் தனது அதிபுத்திசாலித்தனத்தால் மிகவும் குறைந்த வயதிலேயே, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் [TLO ] ஐந்து பேர் கொண்ட தலைமைக் குழுவில் ஒருவராக இடம் பெற்றார். [முத்துக்குமார சுவாமி, புஷ்பராஜா ,வரதராஜப்பெருமாள், தங்கமகேந்திரன் ஆகியோர் ஏனைய நால்வருமாவர்.]


இவரைப்பற்றி எனது நூலான அகாலத்தில் குறிப்பிட்ட சில வரிகள்,
”பெரும் செல்வந்தக் குடும்பத்தின் பின்னணியிலிருந்து வந்த சங்கானைச் சந்திரமோகன் நேர்மை , அர்ப்பணிப்பு ,ஒழுக்கம், வாய்மை,சகல விடயங்களையும் தொட்டுப்பேசும் ஆற்றல் எல்லாமே ஒருங்கே பெற்றவர்,,இவ்வளவு நல்ல பண்புகளையும் பாழாக்குவதுபோல் ,இவரிடம் ஒரு மேட்டுக்குடித்தன்மையும்,எடுத்தெறிந்து பேசும் தொனியும் எப்போதும் காணப்படும்….இதுவே அவர்மீது நான் கொஞ்சம் மனத்தாங்கல் கொள்ள ஏதுவாயிருந்தது… ”
ம்….
இயக்கமும் சிதறி நாமும் எங்கெங்கோ திக்குத் திக்காய் திசைமாறிவிட்டோம் ….ஆனாலும் மிகவும் ஈடுபாடு கொண்டு முழுமூச்சாகத் தமிழின விடுதலைக்காக நாம் ஒன்று சேர்ந்து பாடுபட்ட ஒவ்வொரு கணங்களையும் அவை தந்த , அந்த உன்னதமான உணர்வுகளையும்,…நாம் சிறையிருந்த காலங்களையும் . மனதிலிருந்து பிடுங்கி ஏறிய ஒரு நாளும் ஏலாது..
.கொழும்பில் அவர் வசிப்பதாகவும் ,”அவருடன் பேச விரும்பு கின் றீர்களா” என்று நண்பர் தவராஜா தொலைபேசியில் என்னுடன் பேசும்போது ஒருதடவை கேட் டார் …வேண்டாம் என்று சொல்லிவிட்டதை இப்போது நினைத்து வருந்துகின்றேன்…
… ”பேசியிருக்கலாம் ”என்ற துக்கம் இப்போது அதிகரிக்கின்றது.. மனிதர்கள் உயிரோடு இருக்கும்போது எதுவும் புரிவதில்லை. என்பது எத்துணை உண்மை
அப்போது பார்ப்பதற்கு மிகவும் அழகாயிருப்பார்.. நீண்ட வருடங்களின் பின் அவருடைய இப்போதைய தோற்றத்தைப் பார்த்ததும் காலம் கவர்ந்து செல்வது வருடங்களை மட்டுமல்ல என்ற உண்மை ஒருகணம் வலிக்கவும் செய்தது.
அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு என் அன்பையும் , ஆறுதலையும் தெரிவித்து , இதன்மூலம் அவரின் மறைவுச் செய்தியையும் அனைவருக்கும் அறிவித்துக்கொள்கின்றேன்.

(Pushparani Sithampari)