ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு நாளை

மேல் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்தின மாரசிங்க, சுஜீவ நிசாங்கா மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமினால் இவ்வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்தது.

சதித்திட்டம் தீட்டியமை, தாக்குதல்களுக்கு உதவியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிரதிவாதிகளுக்கு எதிராக மொத்தம் 23,270 குற்றச்சாட்டுக்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட 10 வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் சாட்சிகளாக ஏற்கப்பட்டுள்ளன.

அத்துடன் மறைத்து வைக்கப்பட்டு வெடிபொருட்கள், வாள்கள், துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட இரசாயனங்கள் உள்ளிட்ட 2,076 சான்றுப்பொருட்கள் அடையாளம் படுத்தப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் பல்வேறு பொலிஸ் நிலையங்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஆரம்பத்தில் 25 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

5,000 பக்கங்களுக்கும் அதிகமான ஆரம்பக் குற்றப்பத்திரிகை, 2021 ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் நவம்பர் 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில் திறந்த நீதிமன்றத்தில் பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்டன. பாதுகாப்புத் தரப்பு சட்டத்தரணிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து, அதன் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புப் பிரதிகள் 2022 மார்ச் 3ஆம் திகதி வழங்கப்பட்டன.

எனினும், வழக்கில் 17வது பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்ட நபர், சாட்சிப்பரீட்சை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் சிறைச்சாலை காவலின் இயற்கை மரணமடைந்தார். இதனையடுத்து, எஞ்சியிருந்த 24 பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கைத் தொடரும் வகையில் சட்டமா அதிபர் 2023 பெப்ரவரி 28ஆம் திகதி குற்றப்பத்திரிகையைத் திருத்தினார். குற்றச்சாட்டுக்கள் 2022 செப்டெம்பர் 15ஆம் திகதி பிரதிவாதிகளுக்கு வாசித்துக் காட்டப்பட்டன. குற்றச்சாட்டுக்கள் 2023 மார்ச் 31ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மீண்டும் வாசித்துக் காட்டப்பட்டன.

24 பிரதிவாதிகளும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிராகரித்து, குற்றமற்றவர்கள் என நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனையடுத்து குற்றப்பத்திரிகையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான அரச தரப்பு விசாரணை நீதிமன்றம் முன்னெடுத்தது.

வழக்கு விசாரணை காலப்பகுதியில் பிரதிவாதிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கைகளுக்கு சட்டமா அதிபர் சம்மதம் தெரிவிக்காத காரணத்தினால், நீதிமன்றம் அக்கோரிக்கைகளை நிராகரித்தது. இதனால், 24 பிரதிவாதிகளும் வழக்கு விசாரணை முழுவதும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில், பிரதிவாதிகள் தரப்பின் எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்கள் கடந்த 9ஆம் திகதியின் நிறைவடைந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் 22ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக நீதிபதிகள் அறிவிக்கின்றனர்.

அதன்படி செப்டெம்பர் 22ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதேவேளை, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சுமார் 100 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய மருத்துவத் தேவை உள்ளதா என்பது உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது. எனினும், குறித்த மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படாத நிலையில் இதுதொடர்பில் விளக்கமளிப்பதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளர் செப்டெம்பர் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என கொழும்பு கோட்டை நீதிவான் உத்தரவிட்டிருந்தார். அதன்படி கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளர்  நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.

இதவேளை, கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னதாக சில புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல்கள் கிடைத்திருந்ததாகவும், அந்தத் தகவல்கள் ஏனைய பாதுகாப்புத் தரப்பினருடன் பகிரப்பட்டது தொடர்பான விசாரணை இடம்பெற்று வருவதாக அரச தரப்பு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற இத்தாக்குதல்களில் 274 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் சுமார் 40 பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 35 பேர் சிறுவர்களும் ஆவர். மேலும், 577 பேர் காயமடைந்தனர். அன்றைய தினம்   எட்டு தற்கொலைத் தாக்குதல்காரர்களால் எட்டு குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

கொச்சிக்கடை புனித அந்தோனி யார் தேவாலயம், கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு ரிவிலா ஹோட்டல் உட்பட கொழும்பிலுள்ள மூன்று சுற்றுலாத் துறை ஹோட்டல்கள் அத்துடன் ரொப்பிக்கல் இன் உணவகமும் தாக்குதல்களுக்கு இலக்காகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply