தமிழ்த் தேசியவாதியும் நானும்

1989 இல் அச்சுவேலியைச் சேர்ந்த வட்டார கல்வி அதிகாரி ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் புலி ஆதரவாளர்.தமிழப் பற்றாளர்.எனது அண்ணன் யோகசிங்கம்,அதிபர் இராசதுரை இருவருக்கும் அறிமுகமானவர்.தமிழ் இன ஒற்றுமை,பழைய தமிழர்களின்,வரலாறுகள் எல்லாம் எனக்கு கூறினார்.

வயது அதிகம்,படித்தவர்,என் அண்ணனுடன் பழக்கமானவர் என்ற காரணத்தால் நான் அதிகம் பேச விரும்பவில்லை.தானே இராசதுரையை கொத்தணி பாடசாலை அதிபராக நியமித்ததாகவும் கூறினார்.சந்தோசம் என்றேன்.அவர் பேசி முடிந்ததும் ஒரு கேள்வி கேட்டால் நேர்மையாக பதில் தருவீர்களா என்றேன்.ஆம் என பதிலளித்தார்.பேச்சு மாறக்கூடாது என்றேன்.அவரும் சரி என்றார்.

என் கேள்வி இதுதான்.

ஒரு வேலைக்கான நேர்முகப் பரீட்சை.இதில் ஒரு சிங்களவர்,ஒரு இஸ்லாமியர்,ஒரு தமிழர் ஆனால் அவர் குறைந்த சாதியைச் சேர்ந்தவர்.அந்த நேர்முகப் பரீட்சையை ஒரு தமிழ் பேசும் வெள்ளான இன அதிகாரி நடத்துகிறார்.

இதிலே தகுதியும் திறமையும் என்ற அடிப்படையில் தமிழரான ஒடுக்கப்பட்ட சமூகத்தவரே முதலாவது தகுதி உள்ளவர்,இரண்டாவது இஸ்லாமியர்,மூன்றாவதாக சிங்களவர்.இதில் யாருக்கு அந்த வெள்ளான இன அதிகாரி முன்னுரிமை கொடுத்து வேலை வழங்குவார்.அது நீங்களாக இருந்தாலும் மனசாட்சிப்படி சொல்லவும் என்றேன்.அவரால் பதிலளிக்க தயக்கம் ஏற்பட்டபோது அவரின் அருகே இருந்த அவரின் மனைவியின் தம்பி விசயன் என்பவர் அத்தான் சிங்களவருக்கே கொடுப்பார் என்றார்.அவருக்கும் பின்னர் வேறு வழியின்றி அப்படித்தான் செய்வார்கள் என்றார்.

ஒரு தமிழனாக இருந்தும் சாதி காரணமாக தமிழனை தமிழனே புறக்கணிக்கும் மனநிலை இயல்பானது.இதற்குள் உங்களால் எப்படி தமிழ்த் தேசியம்,ஒற்றுமை என பேச முடிகிறது என்றேன்.அவரோ மௌனமாகி விட்டார்.

ஒருவனது தகுதியையும் திறமையையும் சாதியை மதத்தை வைத்தே தமிழர்கள்,இந்துக்கள் தீர்மானிக்கிறார்கள். இவர்கள் சிங்கள இனவாதம் பௌத்த பேரினவாதம் என்றெல்லாம் பேச என்ன யோக்கியதை இருக்கிறது.

இந்து மதம் மனிதர்களை வர்க்கரீதியாக ஒன்றுபட விடாது.தமிழர்களும் இந்து மதத்தை பின் தொடரும்வரை ஒற்றுமை என்பது சாத்தியமே இல்லை.ஏழைகள்,தொழிலாளர்கள் ஒற்றுமைக்கு மதங்களே களே பிரதான எதிரி.சாதி மத பிரிவினைகளுக்கு எதிராக தமிழ் பேசும் மக்கள் போராடாதவரை தமிழ்த் தேசியம் என்பது பொய்யான நடைமுறையே.சாத்தியப்படாத விசயம்.

(Vijaya Baskaran)