பதுளையில் பற்றி எரியும் வனப்பகுதி ; களஞ்சியசாலையால் அச்சம்

காற்றின் வேகம் மற்றும் அப்பகுதியின் செங்குத்தான நிலப்பரப்பு காரணமாகத் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீ பரவி வரும் இடத்திற்கு அண்மையில் அரசாங்கத்திற்கு சொந்தமான வெடிமருந்து களஞ்சியசாலை ஒன்று அமைந்துள்ளதால், தீ மேலும் பரவினால் அது பெரும் அனர்த்தத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. 

பதுளை பொலிஸார், எல்லதலாவ இராணுவ முகாம் வீரர்கள், பதுளை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

கடும் வறட்சி மற்றும் காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாகப் பரவியுள்ளதாக வனப் பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அதேவேளையில், மனித முயற்சியால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.