புகையிலையற்ற தலைமுறைக்காக…

Youth Action Network Sri Lanka (YAN Sri Lanka) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில், இலங்கையின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொண்டனர். நாட்டின் எதிர்கால சந்ததியைப் புகையிலைப் பயன்பாட்டிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக வலுவான இளைஞர் குரலொன்றை கட்டியெழுப்புவதே இதன் பிரதான நோக்கமாகும்.

இந்நிகழ்வின் போது, இலங்கையில் ‘புகையிலையற்ற தலைமுறை’ கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், குறித்த யோசனையை விரைவாக நிறைவேற்றிச் சட்டமாக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டில் இலங்கை மருத்துவ சங்கத்தினால் (SLMA) இக்கொள்கையை இலங்கைக்கு அறிமுகப்படுத்துமாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. முன்மொழியப்பட்ட கொள்கையின்படி, 2010ஆம் ஆண்டில் அல்லது அதற்குப் பின்னர் பிறந்த நபர்களுக்குப் புகையிலை தயாரிப்புகளை விற்பனை செய்வது தடை செய்யப்படுவது எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த யோசனை 2025ஆம் ஆண்டில் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2026 ஏப்ரல் மாதத்தில் தேசிய மது மற்றும் புகையிலை அதிகாரசபையினாலும் (NATA) சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இளைஞர் சந்ததியைப் புகையிலைத் துறையின் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதும், ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்குவதும் கொள்கை மற்றும் சட்ட ரீதியான மாற்றங்களை அவசியமாக்குகின்றன. அதற்காக நாட்டின் 25 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர்கள் ஒன்றுகூடியமை, பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் இளைஞர் சமூகம் வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பையும் கூட்டுப் பொறுப்பையும் படம்பிடித்துக் காட்டுகின்றது.

‘புகையிலையற்ற தலைமுறை’ என்பது வெறும் கொள்கை மாத்திரமன்றி, எதிர்கால சந்ததியின் சுதந்திரத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் எதிராகக் கட்டியெழுப்பப்பட வேண்டிய கூட்டுப் பொறுப்பாகும். அதற்காக இளைஞர்களின் குரல்களை இணைப்பதே Youth Action Network Sri Lanka அமைப்பின் இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையான நோக்கமாகும்.

Leave a Reply