மஹிந்த ராஜபக்ஷ பேச்சில் இணக்கம் இல்லை

மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஆறு மாகாணங்களின் முதலமைச்சர்களுக்கும் இடையில், நேற்று (22) இடம்பெற்ற பேச்சுவார்த்தை, எவ்விதமான இணக்கப்பாடுகளும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. முன்னாள் ஜனாதிபதியின் கொழும்பு இல்லத்திலேயே இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. வடமாகாண மற்றும் கிழக்கு மாகாணங்களில் முதலமைச்சர்கள் இருவருக்கும் இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதேவேளை, இந்த சந்திப்பில் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷால் ஜயரத்ன பங்கேற்கவில்லை.


மஹிந்த ராஜபக்ஷ தரப்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பந்துல குணவர்தன, ரோஹித அபேகுணவர்தன, காமினி லொக்குகே ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்தச் சந்திப்பின் போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில், கலந்துரையாடப்பட்டது. அந்தத் தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுமாறு, முதலமைச்சர்கள், முன்னாள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர். எனினும், மஹிந்த தரப்பு அக்கோரிக்கைக்கு இணங்கவில்லை.

இந்த சந்திப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க கருத்து தெரிவிக்கையில், “சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களில் நூற்றுக்கு 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள், மஹிந்த ராஜபக்ஷவுடன் இருக்கின்றனர் என்பதை அவர்கள் (முதலமைச்சர்கள்) ஏற்றுக்கொண்டனர்.

ஆகையால்தான், ஒன்றிணைய வேண்டும் என்ற இடத்திலிருந்தே பேச்சை ஆரம்பித்தனர். எனினும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றமையால், எங்களால் அவ்வாறு இணைந்து செயற்படமுடியாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்” என்றார்.

இந்தச் சந்திப்புக்கு பின்னர், மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “பேச்சுவாரத்தை நடத்தினோம். உண்மையில் சந்தோஷமாகத்தான் இருகிறது. வாக்குவாதங்கள் இடம்பெற்றன. இரண்டு குழுக்களிடம் சிற்சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. நாங்கள் நல்ல ஆரம்பத்தை ஏற்படுத்தினோம். அதற்கு நல்லதொரு பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்” என்றார்.