வெளிநாட்டில் மருத்துவச் சிகிச்சை பெற்று வருவதற்காக நாட்டை விட்டுச் சென்றிருந்த ஷிராந்தி ராஜபக்ச, தான் தலைமை தாங்கிய ‘சிறிலியா’ (Siriliya) நிறுவனம் தொடர்பாகக் காவற்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவிடம் வாக்குமூலம் வழங்குவதற்கு 14 நாள் அவகாசம் கோரியிருந்தார். அவர் உரிய காலத்தில் ஆஜராகத் தவறினால், காவற்துறையினர் உடனடியாகப் பயணத் தடை கோருவார்கள் என அமைச்சு வட்டாரங்கள் குறிப்பிட்டன. இதனால் அவர் விமான நிலையத்தை வந்தடைந்ததும் கைது செய்யப்படக்கூடிய சூழல் உருவாகலாம்.
ஷிராந்தி ராஜபக்ச கடந்த செப்டம்பர் 16ஆம் திகதி மருத்துவச் சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றிருந்தார். செப்டம்பர் 24ஆம் திகதி காவற்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவின் முன் ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்து, விமான நிலையத்தில் வைத்து அவருக்குரிய அறிவித்தல் காவற்துறை அதிகாரிகளால் வழங்கப்பட்டது.
எனினும், அவர் நாடு திரும்புவதற்கான உத்தேசத் திகதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும் ஷிராந்தி ராஜபக்ச மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளமையால், அவரது மீள் வருகைத் திகதியானது மருத்துவத் தேவைகளைப் பொறுத்தே அமையும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.