கயானா நாட்டில் முதல் தமிழ் பிரதமர், அறியப்படாத கயானா தமிழ் சமூகம் பற்றிய சில குறிப்புகள்.

கயானா நாட்டில் ஒரு தமிழர் பிரதமர் ஆகி இருக்கின்றார். ஆம் ! உலகிலயே ஒரு நாட்டின் பிரதமராகத் தமிழர் ஒருவர் பொறுப்பேற்றுக் கொள்வது இது தான் முதல் முறை. ஆம் ! இந்தியாவில் ஜனாதிபதியாக அப்துல் கலாம், சிங்கப்பூரில் ஜனாதிபதியாக நாதன் ஆகியோர் இருந்திருக்கின்றனர். மேலும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ், கனடா, தென்னாப்பிரிக்கா எனப் பல நாடுகளில் பல தமிழர்கள் பாராளமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும், துணைப் பிரதமராகவும் இருந்துள்ளனர். ஆனால் அதிகாரம் மிக்கத் தலைமைப் பதவி ஒன்றில் தமிழர் ஒருவர் வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

மோசஸ் வீராசாமி நாகமுத்து என்பவர் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகி உள்ளார். இது உலகம் முழுவதும் உள்ள தமிழர் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. 67 வயதாகும் மோசஸ் வீராசாமி நாகமுத்துப் பலமுறை அந்நாட்டு பாராளமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பெர்பிஸ் (East Berbice Corentine) பகுதியில் 1947-யில் தமிழ் வம்சாவளி பெற்றோரான ராமசாமி நாகமுத்து, கங்கம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் அவர்.

ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய அவர். பின்னர் ஒரு பத்திரிகையாளராகத் தம்மை மாற்றிக் கொண்டார். அதன் பின்னர்ச் சட்டம் பயின்று வழக்கறிஞராக உருவானார். 1992-யில் மக்கள் முற்போக்கு கட்சியின் சார்பில் பாராளமன்ற உறுப்பினராக ஆனார். அதன் பின் தொடர்ந்து 2011-வரை பாராளமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். இடையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், தகவல் தொடர்பு அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அடுத்தப் பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட வேண்டியவர் இவரே என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வட இந்தியர்களது ஆதிக்கம் நிறைந்த மக்கள் முற்போக்குக் கட்சியில் தமிழர்கள் ஒதுக்கப்படுவதை அறிந்து அவர் அக் கட்சியில் இருந்து வெளியேறினார். அவர் பல்லின மக்களை உள்ளடக்கிய மாற்றத்திற்கான கூட்டமைப்பு என்ற கட்சியில் சேர்ந்தார். அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு வட இந்தியர்களின் ஆதிக்கம் நிறைந்த மக்கள் முற்போக்குக் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. இந்தத் தேர்தத்லில் மாற்றத்திற்கான கூட்டமைப்பு பெரும் வெற்றிப் பெற்றது. இதனால் அக் கட்சியின் சார்பில் மோசஸ் வீராசாமி நாகமுத்து பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் மூலம் கயானாவில் தமிழர்களின் நிலைமை மற்றும் அவர்களது தனித்துவ அடையாளங்கள் உலகிற்கு வெளிக்காட்டப்பட்டுள்ளது என்றே நான் கருதுகின்றேன்.

கயானாவில் தமிழர்கள் இருக்கின்ற தகவலை முதன் முதலில் புதுவையில் வசித்திருந்த போதே அறிந்து கொண்டேன். புதுவையில் இருந்து பிரஞ்சு காலனிகளில் வாழ்கின்ற தமிழர்கள் பற்றிய ஒரு புத்தகம் ஒன்றை அங்குள்ள ஒரு நூலகத்தில் வாசிக்க நேர்ந்தது. அதில் ஒரு பக்கத்தில் பிரஞ்சு கயானாவிற்கு அருகே பிரித்தானிய கயானாவில் தமிழர்கள் அதிகம் வாழ்கின்றனர் என்ற தகவல் இருந்தது. அது அப்போது என்னை அதிகம் ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கியது. அதன் பின் கயானா தமிழர்கள் பற்றிய போதிய தகவல்களை என்னால் அறிந்து கொள்ள இயலவில்லை.

பின்னரே இணையத்தில் பல நூல்களை வாசித்தறிந்தேன். கயானாவில் இந்தியர்கள் வாழ்ந்தாலும், அவர்களில் ஒரு சாரார் மதராசிகள் என அழைக்கப்படுகின்றனர். 18-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் மதராஸ் மாகாணத்தில் இருந்து வந்தவர்கள். இத்தனை ஆண்டுகள் கழித்தும் ஏன் இவர்கள் மற்ற இந்தியர்களோடு கலந்து போகவில்லை என்ற ஐயம் வந்தது? அதற்கான விடையைத் தேடிய போது பல அதிர்ச்சியான சங்கதிகளையும் அறிந்து கொண்டேன்.

கனடாவுக்கு வந்த புதிதில் என்னை அதிகம் ஈர்த்த விடயம் இங்குள்ள பல்லின மக்கள் தான். ஆம் மிகச் சாதாரணமாக டொராண்டோ நகர வீதிகளில் பல நாட்டு, பல மொழி பேசும், பல மதங்களைச் சேர்ந்த, பல பண்பாட்டு பழக்க வழக்க பின்னணி கொண்ட மக்களை காணலாம். இது தான் டொராண்டோ நகரத்தின் பெருஞ்சிறப்பும் கூட. அவ்வாறான பல்லின மக்களைச் சந்திக்கும் போது என்னை சட்டென ஈர்த்தவர்கள் கயானா இந்தியர்கள். பார்ப்பதற்கு தென்னிந்தியர்கள் போலவே இருப்பார்கள். இங்குள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் கயானா இந்தியர்களுக்கும் உருவத்தில் பெரிய வேற்றுமைகளைச் சொல்லிவிட முடியாது. அந்தளவுக்கு ஒற்றுமைகள் இருக்கின்றன. ஏனெனில் இந்த இரு சமூகத்தின் வேரும் தென்னிந்தியாவில் இருந்து தொடங்குவது தான்.

நாம் எல்லாம் இந்தியர்கள், இந்துக்கள் என இன்று அடையாளப்படுத்திக் கொண்டாலும். தமிழர்களாகிய நமக்கு எனத் தனிப்பட்ட பண்பாடு, மதம், வாழ்க்கை முறைகள் இருந்திருக்கின்றது. இந்த வாழ்க்கை முறைகளால் நாம் சென்ற இடத்தில் எல்லாம் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். ஆம் ! தமிழர்களை மற்ற இந்தியர்களும், இந்துக்களும் கூடப் புறக்கணித்துள்ளார்கள். ஆனாலும் எதற்கும் தயங்காமல் அந்தத் தனிப்பட்ட வாழ்க்கை முறைகளை நம் முன்னோர் போற்றிப் பாதுகாத்தும் இருக்கின்றனர்.

அவ்வாறு ஒருமுறை பிராம்டன் நகரில் உள்ள ஒரு கயானா கோவிலுக்கு போனேன். அங்கே போன பின்பு தான் தெரிய வந்தது. அது ஒரு மதராசி மதக் கோவில் என. அது என்ன மதராசி மதம் என வியந்து போனேன்? கோவிலில் அம்மன் வழிபாடு தான் பிரதானம். அங்கே ஐயர் இல்லை, ஆனால் பூசாரி உண்டு. ஒரு இளைஞர் தான் பூசாரி. அந்தக்கோவிலில் அம்மனோடு தமிழக நாட்டுப் புறத் தெய்வங்களான சங்கிலிக் கருப்பன், ஐயனார், மதுரை வீரன் போன்ற கடவுள்களும் இருந்ததை என் கண்களால் நம்பவே முடியவில்லை. ஏனெனில் கனடாவில் வாழும் பிற தமிழ் சமூகங்கள் கட்டும் கோவில்கள் எல்லாம் ஐயர்களைக் கொண்டதும், இந்து மதக் கடவுள்களையே கொண்டிருக்கின்றன. ஆனால் இதில் இருந்து மாறுபட்ட ஒரு கோவில் இங்கிருப்பதை அறிந்ததும் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.

அதன் முதற்கட்டமாகக் Hendree’s Cure என்ற நாவலை வாசித்ததேன். கயானாவிற்குப் போன தமிழர்கள் எத்தனை துன்பங்களையும், புறக்கணிப்புக்களையும் சந்தித்துள்ளார்கள் என்பதை அதை வாசித்த போது தான் தெரிந்தது. Hendree’s Cure பற்றி ஏன் சொல்கின்றேன் என்றால் கயானவில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையை வேறு எந்தவொரு நாவலும் இந்தளவுக்கு ஆவணப்படுத்தி இருக்க முடியாது. அது மட்டுமின்றித் தற்போது கயானாவின் பிரதமராகி இருக்கும் மோசஸ் வீராசாமி நாகமுத்து தான் இந்த நாவலின் ஆசிரியரும் கூட.

அது சரி கயானா எங்கிருக்கின்றது? அதற்கும் இந்தியர்களுக்கும் குறிப்பாகத் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம் எனச் சிலர் வினவலாம். தமிழகத்திலிருந்து 19, 000 கி.மீ தொலைவில் உள்ளது கயானா. தென் அமெரிக்காவில் பிரேசில் அருகே இருக்கும் ஒரு நாடு. ஆம் கால்பந்தில் கொடி கட்டிப் பறக்கும் ரொனால்டோவின் நாட்டுக்கு பக்கத்து நாடு. உலகின் மிகப் பெரிய நதியான அமேசான் நதிக்கும் கரீபியன் கடலுக்கும் இடைபட்ட நிலத்தில் இருக்கும் நாடு.

ஆரம்பத்தில் இந்தப் பகுதிகளில் செவ்விந்திய பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 16-ம் நூற்றாண்டு தொடங்கி 18-ம் நூற்றாண்டு வரை ஐரோப்பியர்கள் பலரும் இங்கு வந்து அவர்களை விரட்டி விட்டு இந்தப் பகுதிகளை எல்லாம் கைப்பற்றிக் கொண்டனர். அப்போது அமேசான் நதிக்கு வடக்கே, கரீபியன் கடலை அண்மித்த பகுதிகளைக் கயானா என்றழைத்தனர். இதனைப் பின்னர் ஸ்பானியர், ஆங்கிலேயேர், ஒல்லாந்தர், பிரஞ்சினர், போர்த்துகேயர் ஆகியோர் ஐந்தாகப் பங்கிட்டுக் கொண்டனர். இதில் ஆங்கிலேயேர் வசமான பகுதி பிரித்தானிய கயானா என்றழைக்கப்பட்டது.

பிரித்தானிய கயானா நிலப்பரப்பால் மிகவும் பெரியது. அதன் மொத்த பரப்பளவு என்பது தமிழகத்தை விட இரு மடங்கு பெரியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்தப் பகுதியின் தட்ப வெட்பமும் தமிழகத்தை ஒத்ததே. அங்கு நீண்டு விரிந்த நிலங்கள், வளமை சேர்க்கும் ஆறுகள், காடுகள், கடல்கள் என எல்லா வளமும் இருந்தன. ஆனால் மக்கள் வளம் இல்லை. இதனால் இந்த நிலத்தில் இருந்து வருவாய் பெற வழியில்லையே எனப் பிரித்தானியா ஆங்கிலேயே அரசு சிந்தித்தது. அதனால் முதலில் ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளை விலைக்கு வாங்கிக் கரும்புத் தோட்டங்களை உண்டாக்கினார்கள். நல்ல வருவாய்க் கிடைத்தது.

ஆனால் கருப்பின மக்கள் தொடர்ந்து உழைக்கக் கூடியவர்கள் அல்ல. அவர்களுக்குக் கடுமையான தோட்ட வேலைகள் ஒத்துவரவில்லை. ஆப்பிரிக்காவில் வேட்டையாடுவதும், ஆட்டம் பாட்டம் எனச் சுதந்திரமாக வாழ்ந்த மக்களால் இத்தகைய சூழலை சீரணிக்கமுடியவில்லை. 18-ம் நூற்றாண்டில் பிரிட்டன் காலனிகளில் அடிமை முறைகளைக் கைவிடும் சட்டத்தை அந்நாட்டுப் பாராளமன்றம் இயற்றியது. இதனால் ஆப்பிரிக்கா மக்கள் சுதந்திரமாகப் போகத் தொடங்கினார்கள். தோட்டங்களில் வேலை செய்வதைக் கைவிட்டு தனித்து வாழத் தொடங்கினார்கள்.

இந்நிலையில் தோட்டங்களில் பணியாற்ற ஆட்கள் இல்லாத நிலையில் பிரிட்டன் ஒரு திட்டம் போட்டது. தனது காலனிகளிலேயே மக்கள் தொகை மிகுந்த இந்தியாவில் இருந்து கூலிகளைக் கொண்டு வருவது என்பதே அத்திட்டம். இதன் பிரகாரம் இந்தியா முழுவதும் அறிவிப்புச் செய்தனர். ஆனால் பல பாகங்களில் இருந்து எவ்வித ஆதரவும் வரவில்லை. இதனால் அவர்கள் இந்தியாவில் பின் தங்கிய பிரதேசங்களாக இருந்த போஜ்பூர் ( இன்றைய மேற்கு உத்தரபிரதேசம், கிழக்குப் பிகார் ), சோட்டா நாக்பூர் ( ஜார்க்கண்ட், வங்காளத்தின் சில பகுதிகள், ஒரிசாவின் சில பகுதிகள் ), மதராஸ் ( தமிழ்நாடு, ஆந்திரா ) ஆகிய பகுதிகளில் இருந்து மக்களை ஐந்தாண்டு ஒப்பந்த தொழிலாளர்களாக அழைத்துச் சென்றனர்.

இவ்வாறு கொல்கத்தா, சென்னை துறைமுகங்களில் இருந்து பலரை அங்கு அழைத்துச் சென்றனர். 1838-யில் இருந்து 1917 வரை ஆயிரக் கணக்கான தமிழர்கள் கயானாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். முதன் முதலில் ஜான் கிளாட்ஸ்டோன் என்ற வெள்ளையின முதலாளியின் கரும்புத் தோட்டங்களில் தான் தமிழர்கள் பணியாற்றினார்கள். 1845 முதல் 1948 வரையில் இந்தியாவில் இருந்து 45 கப்பல்களில் தொழிலாளர்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் 21 கப்பல்கள் சென்னையில் இருந்து சென்றவை. 1921-யில் 60 ஊர்களில் 1500 தமிழ் குடும்பங்கள் வாழ்ந்திருந்தனர்.

கயானா நிலப்பரப்பல் மிகப் பெரிய தேசம், ஆனால் அதன் மக்கள் தொகை மிகவும் சிறியது. மொத்தமே 735, 000 பேர் மட்டுமே. இதில் ஏறத்தாழ 70, 000 பேர் தமிழ் வம்சாவளிகளாக இருப்பார்கள் அதாவது 10 % பேர் தமிழ் வம்சாவளியினர் எனக் கருதப்படுகின்றது. தமிழர்களில் 65 % பங்கினர் மதராசி ( திராவிட ) மதத்தைப் பின்பற்றுகின்றனர். 35 % கிறித்தவ மதத்தைத் தழுவிக் கொண்டனர். ஆனாலும் அவர்களது பண்பாட்டு பழக்க வழக்கங்களில் தமிழர் அடையாளங்கள் எஞ்சியிருக்கின்றன. தற்சமயம் தமிழர்கள் கோரண்டீன், பெர்பீஸ் (East Berbice Corentine) என்ற பகுதியில் தான் அதிகம் வாழ்கின்றார்கள். அங்கு அவர்கள் தான் பெரும்பான்மையினரும் கூட. கயானாவில் எசக்கூபோ நதி ஓடுகின்றது. காவிரி நதி போல மிகப் பெரிய ஆறு இது. 620 மைல்கள் நீளமுடையது. இந்த ஆறு நாட்டை இரண்டாகப் பிரிக்கின்றது. இந்த ஆற்றின் கிழக்குப் பகுதியில் தான் அதிக மக்கள் வாழ்கின்றார்கள். கிழக்குப் பகுதியில் மற்றுமொரு ஆறு ஓடுகின்றது கோரண்டீன். இது சுரிநாம் நாட்டைக் கயானாவில் இருந்து பிரிக்கின்றது. இந்த ஆற்றை அண்மித்த பகுதியில் தான் தமிழர்கள் அதிகம் வாழ்கின்றார்கள்.

ஆரம்பக் காலங்களில் தோட்டத்தில் பணியாற்றினாலும் பின்னர் அவர்கள் பலரும் அதில் இருந்து வெளியேறி தொழில்கள் புரிந்துள்ளனர். பலரும் நன்கு கற்று ஆசிரியர்களாக, அரசு ஊழியர்களாகப் பணியாற்றி இருக்கின்றனர். 1898-யில் அரசு ஊழியர்களாக நியு ஆம்ஸ்டர்டாம், ஜார்ஜ் டவுன் பகுதியில் இருந்தவர்கள் தமிழர்களே. அப்போது வட இந்தியாவில் இருந்து அதிகக் குடியேற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தமையால் இந்த அதிகாரிகளால் குடியேற்றவாசிகளோடு தொடர்பு கொள்ள இயலவில்லை. ஏனெனில் வட இந்தியர்கள் பேசியதோ இந்தி, இவர்கள் பேசியதோ தமிழ். இதனால் அப்போது பெரும் பிரச்சனை மூண்டது.

அதன் பின் கயானாவில் தமிழர்களின் தொகை குறைந்துவிட்டது. 1921-யில் பல தமிழர்கள் தாயகம் திரும்பினார்கள். ஆனால் சிலர் மட்டும் அங்கேயே தொடர்ந்து வாழத் தொடங்கினார்கள். அப்போது வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமானது. ஆங்கிலேயே அரசு இவர்களுக்குத் தம் தாய்மொழிகளைக் கற்றுக் கொடுக்கப் போதிய வசதிகளைச் செய்து தரவில்லை. பெரும்பாலான மக்கள் அப்போது எழுத படிக்கத் தெரியாத பாமரர்கள் என்பதால் அவர்களுடைய மொழியும் அழிந்தே போனது. பல தமிழர்கள் தமிழ் மொழியை மறந்து போனதோடு இந்தியைப் பழகினார்கள். ஆனால் காலப் போக்கில் இந்தியும் மறைந்து ஆங்கிலம் நிலைகொண்டது.

ஆரம்பக் காலங்களில் தென்னிந்தியாவில் இருந்து அங்கே போனவர்களை வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தென்னிந்தியர்களது மத நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் என்பவை எல்லாம் வட இந்தியர்களை விட முற்றாக வேறுபட்டு இருந்தது. இதனால் அவர்களைத் தீண்டத் தகாதவர்களாக ஒதுக்கி வைத்துவிட்டனர். இவர்கள் தமக்கான ஒரு சமூகத்தைக் கயானாவில் நிறுவினார்கள். மதராசிகள் என்றழைக்கப்பட்ட தமிழர்கள் கயானாவின் அல்பியன், கோரண்டீன் பகுதிகளில் 60 கிராமங்களில் வாழ்ந்தனர். இவர்களில் பலரை அங்கு வாழ்ந்து வந்த ஆப்பிரிக்கச் சமூகம் ஏற்றுக் கொண்டது. பறை அடிப்பது, மாட்டுக் கறி தின்பது, வெறியாடுவது போன்ற பழக்க வழக்கங்கள் மதராசிகளையும் கறுப்பினத்தவரையும் ஐக்கியப்படுத்தியது.

இதன் விளைவாகச் சிலர் கறுப்பின மக்களோடு கலந்து விட்டனர். இன்றளவும் தமிழ் சொற்கள் அவர்களது அன்றாடப் பயன்பாடுகளில் இருக்கத் தான் செய்கின்றது. கறி, குழம்பு, வேம்பு, கறிவேப்பில்லை என உணவுப் பொருட்களில் பெயர்கள் தமிழில் உள்ளன.

தமிழர்கள் மத்தியில் இன்னமும் தமிழ் பெயர்களைத் தான் அவர்கள் பிள்ளைகளுக்கு தொடர்ந்து வைத்து வருவதால் இவர்கள் தமிழர்கள் என்ற அடையாளம் பேணப்பட்டு வருகின்றது. வீராசாமி, பெருமாள், நாகமுத்து, நாகய்யா எனப் பல தமிழ் பெயர்கள் இன்றளவும் வைக்கப்படுகின்றது.

இன்றளவும் தமிழகத்தில் பெரியவர்களை பெயர் சொல்லி அழைப்பதில்லை. அந்தக் குடும்பத்தின் மூத்த பிள்ளையின் பெயராலே அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைப்பார்கள். நாகா அப்பா வந்திருக்கார், கார்த்தி அம்மா எங்கே என அழைக்கும் வழக்கம் கயானா தமிழர்களிடமும் உள்ளதை மோசஸ் வீராசாமி நாகமுத்துப் பதிவுசெய்கின்றார்.

அது மட்டுமில்லையே, உலகிலயே குழந்தை பிறக்கும் போது அழுவதும், ஒரு மனிதன் இறக்கும் போது ஆட்டம் பாட்டமாகக் கொண்டாடும் வழக்கமும் தமிழர்களுடையது தான். ஆம் இன்றளவும் தமிழகத்தில் சாவு வீடுகளில் சாவு ஆட்டம் ஆடுவதும் கொண்டாட்டத்தோடு வழி அனுப்பி வைப்பதை மிகச் சாதாரணமாகப் பார்க்கலாம். இந்த வழக்கம் இன்றும் கயானா தமிழர்களிடையே காணப்படுகின்றது.

1940-களில் வட இந்தியாவில் இருந்து வந்த பாரதச் சேவாசிரம சங்கம், ஓம் இந்துத்வாம் ஆகிய இயக்கங்கள் இந்தியர்களிடையே இந்து மத மறுமலர்ச்சியை ஏற்படுத்த முயன்றனர். ஆனால் வட இந்தியர்களுக்கும் தென் இந்தியர்களுக்கும் இடையில் காணப்பட்ட பேதங்களால், இந்த இயக்கங்களில் தென் இந்தியர்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இதனால் சில தமிழர்கள் வட இந்தியர்கள் காட்டிய சாதிய வெறுப்பினால் கிறித்தவத்துக்கு மதம் மாறிக் கொண்டனர்.

பல தமிழர்கள் தொடர்ந்து தம்முடைய மதராசி மதத்தைத் தனியாக வளர்த்தெடுத்தனர். அவர்கள் அங்கே பல கிராமங்களை உருவாக்கிக் கொண்டுள்ளனர். பறை மேளம், தப்பு மேளம், கூத்தாட்டம், அம்மன் வழிபாடு போன்றவைகள் தமிழர்களின் தனித்துவ அடையாளங்கள். இதனைக் கயானா தமிழர்கள் போற்றிப் பாதுகாத்து வந்திருக்கின்றனர்.

தமிழ் சமூகத்தின் முக்கியமான பண்பாட்டு அடையாளம் தாய் தெய்வ வழிபாடு. அந்தக் காலத்தில் தமிழகத்தின் நாட்டுப் புறங்களில் மாரி அம்மன் வழிபாடு நிகழ்வது உண்டு. அதற்கு பூசாரிகள் இருப்பார்கள். அவர்கள் மீது அம்மன் இறங்குவதும் வெறியாடுவதும் வழக்கம். இந்த பழக்க வழக்கம் தமிழருக்கே உரிய சமய அடையாளமாகும். அதே போல தெய்வங்களுக்கு ஆடு, மாடு, சேவல் என பலியிடுவதும், அதன் இறைச்சிகளை கறிசோறு பொங்கி சாப்பிடுவதும் வழக்கம். அதே போல மதுபானங்கள், புகையிலைகள் படைப்பதும் வழக்கம். வெறியாடுவது, பறை மேளம் அடிப்பது, குறி சொல்வது போன்றவைகள் எலலம் தமிழர் சமயத்தை இந்து சமயத்தில் இருந்து தனித்துக் காட்டும் அடையாளங்கள். இன்று தமிழகத்தில் தமிழர் சமயம் இந்து சமயத்தோடு இணைக்கப்பட்டுவிட்டது. ஆனால் கயானாவில் தமிழர்கள் தம் சமயத்தை தனி சமயமாக வளர்த்து எடுத்துள்ளனர். மாயி வழிபாடு என்ற அம்மன் வழிபாடுகள் பல நிகழ்கின்றன. இதில் இந்தியர்கள், கறுப்பினத்தவர்கள் கூட கலந்து கொள்கின்றனர். அதன் பாடல்கள் இன்றளவும் தமிழில் இருப்பது தான் வியப்பான உண்மை. பறை மேளங்கள், கூத்தாட்டங்கள் கூட ஆடப்படுகின்றன.

லியனோரா, டயமண்டு, என்மூர், லா பெனிடன்ஸ், குட் பைத், மகாய்கோனி ஆகிய பகுதிகளில் தமிழர்கள் இருக்கின்றார்கள். ஆனால் கோரண்டீனில் தான் அதிகம் பேர் வாழ்கின்றனர். இது கயானா தமிழர்களுக்கு ஒரு தாயகம் போல. அங்கே பல அம்மன் கோவில்கள் உள்ளன. அங்குப் பல பூசாரிகள் இந்தக் கோவில்களை நடத்தி வருகின்றனர். அங்கே வேத மந்திரங்கள் ஓதப்படுவதில்லை. எல்லாம் நாட்டுப்புறத் தமிழ் வழிபாடு மட்டுமே. இந்தக் கோவில்கள் தமிழர்களை ஒருங்கிணைத்தும் வந்துள்ளது. ஆரம்பத்தில் மாரியம்மா கோவில் என்றே அழைக்கப்பட்டு வந்தாலும் அண்மையக் காலங்களில் வட இந்தியாவில் இருந்து போய் அங்கு இயங்கி வரும் இயக்கங்களினால் அவை காளிமா கோவில் என மாறி வருகின்றது. ஆனாலும் இந்த வழிப்பாட்டு முறை இன்றளவும் மதராசி மதம் என்றே அழைக்கப்படுகின்றது. வட இந்தியர்களால் நடத்தப்படும் கோவில்கள் மட்டுமே இந்து மதம் என்று அழைக்கப்படுகின்றது.

கடந்த 35 ஆண்டுகளாக இந்தியர்கள் ஆதிக்கம் கொண்டுள்ள மக்கள் முற்போக்குக் கட்சி ஆட்சி நடத்தி வந்தாலும். இது வரையில் ஒரு தமிழரைக் கூட அவர்கள் பிரதமர் ஆக்கியது இல்லை. இந்நிலையில் அந்தக் கட்சியில் இருந்து வெளியேறிய மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்கள் வட இந்தியர்களின் ஆதிக்கத்துக்கு ஒரு முடிவு கட்டியதோடு. கறுப்பின மக்கள், தமிழர்கள் ஆகியவர்களின் ஆதரவில் ஆட்சி அமைத்து வரலாறு படைத்திருக்கின்றார். கயானாவின் வட இந்திய ஆதிக்கம் மிக்க கட்சியின் தோல்விக்கு அவர்களது இனவெறிக் கருத்துக்களே முக்கிய காரணம். முன்னாள் கயானா அதிபர் பாரத் ஜக்தீயோ ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய போது, ” காலங்காத்தால் ஆறு மணிக்கு எல்லாம் பறை மேளம் அடிக்கின்றனர் எதிர்க்கட்சியினர், அந்தக் கூலிகளை தூக்கி எறிவோம்” எனப் பேசியிருந்தார். அதன் விளைவு இன்று தமிழர்கள், கறுப்பினத்தவர்கள் வட இந்தியர்களின் ஆதிக்கத்துக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கின்றது.

கயானாவில் தற்சமயம் தமது பூர்விகம் குறித்த விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதே சமயம் கயானாவில் வாழும் தமிழர்களோடு தாய் தமிழகம் எவ்வித உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பது வருத்தம் தருவதாக உள்ளது. கயானாவில் வேளாண் துறை ஆய்வில் ஆராய்ச்சி செய்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த துரை வையாபுரி போன்றோரும் கயானாவோடு தமிழகமும் அனைத்து வித தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதையே விரும்புவதாகக் கயானா குரோனிக்கள் என்ற செய்தி தாளில் குறிப்பிட்டுள்ளார்.

மாறாக வட இந்திய அமைப்புக்கள் அங்குப் பிராமண மதத்தையும், இந்தி மொழியையும், பாலிவுட் சினிமாவையும் பரப்பி வருகின்றனர். ஆனால் அங்கு வாழ்கின்ற தமிழர்களுக்குத் தமிழ் பண்பாடு, மொழி போன்றவைகளைக் கற்றுத் தரவும். தமிழ்நாட்டோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் தமிழக அரசும், இங்குள்ள தமிழர் அமைப்புக்களும் தவறியுள்ளன.

தொகுப்பு : புதியவன்