விரிவடைந்துவரும் மனிதக் குடியிருப்புகள், தொழிற்மயமாக்கல் மற்றும் அபிவிருத்திப் பணிகள் என்பன, குறிப்பாக தாழ்நாட்டு ஈரப்பதமான வலயங்களில் வனவிலங்குகளின் இயற்கையான வாழிடங்களைக் சுருக்கியுள்ளன. இதனால், வனவிலங்குகள் நகரங்களை நோக்கி நகர்வதோடு, கொழும்பு போன்ற பகுதிகளில் மனித-வனவிலங்கு மோதல்கள் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“மயில்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் ஊனுண்ணி விலங்குகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உதாரணமாக, நரிகள் மயில்களின் முட்டைகளை உட்கொள்வதன் மூலம் அவற்றின் எண்ணிக்கையை ஒழுங்குபடுத்துகின்றன. எவ்வாறாயினும், வாழிட இழப்பு மற்றும் ஊனுண்ணி விலங்குகளின் எண்ணிக்கை குறைவு காரணமாக இந்த இயற்கையான சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதுவே நகரப் பகுதிகளில் மயில்கள் பெருகுவதற்கு வழிவகுத்துள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
குரங்குகளின் இயற்கையான வாழிடங்களும் சுருங்கி வருவதால், அவையும் மனிதக் குடியிருப்புகளுடன் அதிகளவில் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. கேகாலை மற்றும் களுத்துறை மாவட்டங்கள் உள்ளிட்ட தாழ்நாட்டு ஈரப்பதமான வலயங்களில் இவ்வாறான விலங்குகள் பொதுவாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்ட ஹசினி சரத்ச்சந்திரா, தொழிறமயமாக்கல், அபிவிருத்தி மற்றும் மனிதக் குடியிருப்புகளின் விரிவாக்கம் ஆகியவை வனவிலங்கு வாழிடங்கள் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன என்றார். மேலும், வாழிடங்களை இழப்பதால் சிறிய ரக விலங்குகளும் நகரப் பகுதிகளுக்குள் நகர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஹோமாகம உள்ளிட்ட நகர்ப்புற மற்றும் அரை நகர்ப்புறப் பகுதிகளிலும் மான்கள் நடமாடுவது பதிவாகியுள்ளது. ஒரு வீடொன்றுக்கு வளர்ப்புப் பிராணிகளாகக் கொண்டுவரப்பட்ட இரண்டு மான்களில் இருந்து அப்பகுதியில் மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சரத்ச்சந்திரா தெரிவித்தார்.
வனவிலங்குகள் மனிதர்களுடன் வாழிடங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, குறிப்பாக விலங்குகள் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும்போதும் அல்லது கடிக்கும் அபாயம் ஏற்படும்போதும் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுவது இயல்பே.
இதுதொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், கொழும்பு வனவிலங்குப் பிராந்திய அலுவலகம், கம்பஹா மாவட்ட மேற்கு மாகாண வனவிலங்கு அலுவலகம், முத்துக்குராஜவல வனவிலங்குப் பிராந்திய அலுவலகம் மற்றும் அத்தினிதிய வனவிலங்குப் பிராந்திய அலுவலகம் உள்ளிட்ட வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பல பிராந்திய அலுவலகங்கள் வனவிலகுகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு அமைவாகப் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
பொதுமக்களைத் தாக்கும் அல்லது கடிக்கும் விலங்குகள் குறித்து முறைப்பாடு கிடைக்கும் பட்சத்தில், திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக அந்த விலங்குகள் பிடிக்கப்பட்டு, நகர்ப்புற குடியிருப்புகளிலிருந்து விலகிச் செல்லும் பொருத்தமான வாழிடங்களில் விடப்படுவதாக அவர் கூறினார்.
காயமடைந்த விலங்குகள் சிகிச்சைகளுக்காக அத்தினிதிய வனவிலங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, குணமடைந்ததன் பின்னர் பொருத்தமான வாழிடங்களில் விடுவிக்கப்படுகின்றன. உதாரணமாக, இடமாற்றம் செய்யப்பட வேண்டிய மான்கள் வறண்ட வலயத்திலுள்ள பொருத்தமான தேசிய பூங்காக்களில் விடப்படுகின்றன என்றார்.
எவ்வாறாயினும், நகரப் பகுதிகளில் இருந்து வனவிலங்குகளை முழுமையாக அகற்றுவது கடினமானது எனக் குறிப்பிட்ட சரத்ச்சந்திரா, இந்த விலங்குகளின் இருப்பு அவைகளின் இயற்கையான சூழலில் ஏற்பட்டுள்ள பரந்த மாற்றங்களுடன் தொடர்புடையது என்றார். எனவே, குறிப்பிட்ட பாதுகாப்புப் பிரச்சினைகளுக்குப் பதிலளித்தல், காயமடைந்த விலங்குகளுக்குச் சிகிச்சையளித்தல் மற்றும் அவசியமான சந்தர்ப்பங்களில் பொருத்தமான வாழிடங்களுக்கு அவற்றை இடமாற்றம் செய்தல் போன்ற நடவடிக்கைகளிலேயே திணைக்களம் கவனம் செலுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.