இந்தியாவின் கோயம்புத்தூர் அம்ரிதா பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலைத் துறையின் மூத்த பேராசிரியரும், குறித்த பல்கலைக்கழகத்தின் சார்பில் கண்காட்சிக்கு வந்திருப்பவருமான துணைப் பேராசிரியர் பிரதீக் சுதாகரன், யாழ்ப்பாணத்தில் செயற்படும் மூத்த கட்டடக்கலை நிபுணர் மயூரநாதன் மற்றும் ஒஸ்ரின் அலோசியஸ் ஆகியோர் இக்கருத்தாடற் களத்தின் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.
“கோவில், குளம் இரண்டும் இணைந்திருக்கும் ஒரு பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ் சமூகப் பின்னணியில், இவை இரண்டும் எப்போதும் இணைந்ததாக இருந்ததில்லை என்பதும், எமது பரிணாம வளர்ச்சியின் வேறொரு தருணத்தில் இவை இணைக்கப்பட்டிருக்கலாம், அவற்றின் பயன்பாடு காரணமாக நீர்நிலையும் வழிபாட்டு இடங்களும் ஒன்றாகச் சேருகின்ற நிலை பரவலாக ஏற்பட்டிருக்கலாம்” என்ற கருத்தை மயூரநாதன் முன்வைத்த போது, அதேபோன்று ‘மூர்த்தி, தலம், தீர்த்தம்’ அல்லது இயற்கையும் இறையும் ஒன்றாக அமைந்திருக்கும் பின்புலம் கிராமங்களிலும் பெருநகரங்களிலும் எவ்வாறு தொடர்கிறது என்பது பற்றி விபரமாக ஆராயப்பட்டது.
‘Architecture’ அல்லது கட்டடக்கலை என்பது பன்முகத் தன்மை கொண்ட ஒரு பார்வை என்பதும், அதுபோன்ற மற்றைய துறைசார் பார்வைகளும் இணையும்போதுதான் நவீன முறையில் நாம் சிந்தனைகளைச் சேர்த்து, பல புள்ளிகளை இணைத்து எமது இயற்கைக்குப் பொருத்தமானதாகவும் உடல் நலத்திற்கு உகந்ததாகவும் கட்டுமானங்களை ஏற்படுத்தலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது மரபுரிமை வழிவந்த நகரங்களில் வழிபாட்டிடங்கள் மரபுரிமை பேணுபவையாக இருக்கும் பொழுது, அவற்றை தனித்து எடுத்துப் பாதுகாப்பதில் உள்ள சவால்களும், பாரம்பரியமிக்க புராதனக் கட்டடங்கள் அழிக்கப்பட்டு புதுமையின் பெயரால் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் இவ்வாறான சிந்தனைக்கு மாறாகவே நடந்து வருவது குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டது.
நல்லூர் ஆலயம் மற்றும் அதன் தொன்மையைப் புரிந்துகொண்ட எமது கேரள நாட்டு அமைப்பு முறைக்கு முரணாக, அதன் முன்வாசலில் புதிதாகக் கிளம்பியிருக்கும் கண்ணாடி மற்றும் அலுமினியத்திலான நவீன கட்டடங்கள் பார்வையாளருக்கு முரணாகத் தெரிவது சுட்டிக்காட்டப்பட்டது.
அதுபோன்ற பரந்த சிந்தனைக்குட்பட்ட வகையில், யாழ்ப்பாணம் என்ற மரபுரிமை வழிவந்த பழைய நகரத்தின் புதிய வளர்ச்சிக்குப் பழமையைப் பாதுகாக்கும் முயற்சிகள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்பதை வந்திருந்தவர்கள் ஏற்றுக்கொண்டதும் கவனிக்கத்தக்கது.
காடுகள் அழிக்கப்பட்டு கட்டடங்கள் ஏற்படுவதும், விவசாய நிலங்கள் விவசாயத்திற்கு அப்பாற்பட்ட முயற்சிகளுக்காகக் கைப்பற்றப்படுவதும், இவை எல்லாமே நிலத்தடி நீரைப் பேணுகின்ற இயற்கையின் தொகுதிப் பிரிக்கும் முயற்சிகளுக்குப் பாதகம் விளைவிப்பதாக அமைவது வலிந்து கூறப்பட்டது.
இந்த இடத்திலே இவற்றைப்பற்றிய சிந்தனைகளை வேறுபல உதாரணங்களோடு, யாழ். கச்சேரி அருகே உள்ள பழைய பூங்கா உட்பட்ட அபிவிருத்திக்கும் பேணிப் பாதுகாத்தலுக்கும் இடையே உள்ள முரண்பாடு அல்லது இழுபறி நிலையைத் தாண்டிச் செல்வதற்குரிய குரலை மக்கள் இயக்கம் ஒன்று மேற்கொள்வதன் மூலமே, அதற்கான அழுத்தத்தைப் பயன்படுத்தி எமக்கு உகந்த வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளும் தன்மையை நிலைநிறுத்த முடியும் என்று பங்கேற்பாளர்கள் குறிப்பிட்டனர்.
சில இடங்களில் சமூகத்தில் நிலவுகின்ற அறியாமையை ஒரு பகுதியினரின் நன்மைக்காக விட்டுக்கொடுக்கும் வகையில் அரசு இயங்கும் நிலையையும் நாம் பார்க்கிறோம்.
“நல்லூர் என்ற நானூறு வருட வரலாறு கொண்ட தலைநகரம் ஒரு இராஜதானிக்குக் கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தைப் பெறுகிறதா?” என்பது போன்ற கேள்விகளுடன், அவற்றை ஒழுங்கமைத்து உரிய வகையில் கண்காணிப்பதற்குரிய வலுமிக்க கொள்கைகள் வகுக்கப்படுகின்றனவா, அந்தக் கொள்கைகள் நிலைநாட்டப்படுகின்றனவா என்பவை பற்றிய புதிய கேள்விகளும் முன்வைக்கப்பட்டன.
இந்த இடத்திலே உள்ளூராட்சி அரசுகளாக அண்மையில் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட பல்வேறு பிரதேசங்களுக்குரிய பிரதேச சபைகளில், இவற்றை விளங்கி சிந்தித்து அதன்படி செயலாற்ற வல்ல புதியவர்கள் பலபேர் முன்வந்திருக்கின்ற இன்றைய நிலையில், அவர்களை உற்சாகப்படுத்தி, அவர்களுக்குரிய அனுசரணைகளை வழங்கி கல்விச் சமூகம் அவர்களுக்குச் சாதகமாகச் செயற்படுவதற்குரிய வாய்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
அந்த இடத்தில் வஸ்பார் செயற்திட்டம் வலிகாமத்தினூடாக ஊடறுத்துச் செல்லும் வழுக்கை ஆற்றின் நீரேந்து பிரதேசத்தில் அமைந்திருக்கும் நான்கு பிரதேச சபையினரையும் ஒன்றிணைத்து, அரசியல் வேறுபாடுகளுக்கும் கட்சிகளின் அடையாளங்களுக்கும் அப்பாற்பட்ட வகையில் நீர்வளத்தைப் பேணுகின்ற முயற்சிக்குச் சாதகமாக இயங்குமாறு வலுப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடப்பட்டது.
அந்தக்கருத்துக்கு ஒத்த வகையில் வழுக்கை ஆற்றுக்கான எதிர்காலத்தை, அதனுடைய ஆளுகையை அரசுடனும் அரச அலகுகளுடனும் கட்டுப்பாடுகளுக்கேற்ப மக்கள் மயப்படுத்தப்பட்ட சபையொன்று இயங்குவதன் நன்மையைப் பற்றியும் கூறிக்கொண்டு இக்கருத்தரங்கு நிறைவுபெற்றது.