கன்னியாவில் கட்டுமானப் பணி: சீராய்வு மனுத் தாக்கல்

நீதிமன்றத் தீர்ப்பை மீறி முன்னெடுக்கப்படும் இக்கட்டுமானப் பணிகளுக்கு எதிராக, கன்னியா பிள்ளையார் ஆலய ஆதீனகர்த்தா திருமதி கோகிலரமணி கணேஷ் என்பவரால் திருகோணமலை மேல் நீதிமன்றில் வியாழக்கிழமை (23) அன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 2019 ஆம் ஆண்டு இவ்விடயம் தொடர்பாகத் திருகோணமலை மேல் நீதிமன்றில் நிலுவையிலிருந்த வழக்கின் கட்டளையை அடிப்படையாகக் கொண்டு, மனுதாரரான திருமதி கோகிலரமணி கணேஷ் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார், குறித்த வழக்கை நகர்த்தல் பத்திரம் (Motion) மற்றும் சத்தியக்கடதாசி (Affidavit) மூலம் மேல் நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

இவ்விடயத்தை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி எம். என். எம். அப்துல்லா, குறித்த மனுவில் எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் மற்றும் திருகோணமலை மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கு நீதிமன்றக் கட்டளை அறிவித்தலை (Notice) அனுப்புமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டார். அத்துடன், இம்மனுவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் தீர்மானித்தார்.

கன்னியா பிள்ளையார் கோவில் விவகாரம் தொடர்பில், 2019 ஆம் ஆண்டு அக்கோவிலின் ஆதீனகர்த்தாவான திருமதி கோகிலரமணி கணேஷினால் தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், அப்போதைய மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனால் கட்டளையொன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது.

“அக்கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக எவ்வித ஆன்மீக அல்லது இதர கட்டுமானங்களையும் எத்தரப்பினரும் மேற்கொள்ளக் கூடாது என்றும், அங்குள்ள புராதன சிதைவுகள் உள்ளவாறே தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும்,” என்றும் அந்த இடைக்காலக் கட்டளையிலும், பின்னர் வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தமை நினைவுகூரத்தக்கது.

Leave a Reply