காணாமல்போன ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவின் மனைவி மற்றும் மையம் கொள்கை மாற்றத்திற்கான (CPA) அமைப்பு என்பன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரித்த, நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான மூன்று நீதியரசர்கள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
காணாமல்போன ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவின் வழக்குத் தொடர்பாக ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணையின்போது நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, 2019 மே 23 அன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.
சிபிஏ (CPA) அமைப்புக்காக ஜனாதிபதி சட்டத்தரணி பிரான் கோரியுடன், லூயி கணேசநாதன் மற்றும் கியாதி விக்ரமநாயக்க ஆகியோர் ஆஜராகினர். சந்தியா எக்னெலிகொட சார்பில் சட்டத்தரணி அஸ்திக தேவேந்திரவுடன், புலஸ்தி ஹேவமான ஆகியோர் ஆஜராகியதுடன், மஞ்சுலா பாலசூரியவினால் அறிவுறுத்தப்பட்டனர்.
ஞானசார தேரர் சார்பில் சட்டத்தரணி திஷ்ய வெரகொடவுடன், சஞ்சய மரம்பே மற்றும் இரேஷ் செவிரத்ன ஆகியோர் ஆஜராகினர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசா முஸ்தபாவுடன், புலஸ்தி ரூபசிங்க ஆஜராகினர்.
ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்குள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டமைக்காக, ஞானசார தேரருக்கு 2018 ஓகஸ்ட் மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் 19 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவை ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு ஒரே நேரத்தில் அனுபவிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் 2016 ஜனவரி 25 அன்று ஞானசார தேரர் நடந்துகொண்ட விதம் நீதிமன்ற அவமதிப்புக்குரியது என்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை, 2018 ஒக்டோபர் 5 அன்று உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.