மகா சங்கத்தினரின் கோரிக்கைகள் தொடர்பில் சுமார் ஒரு மாத காலத்திற்குள் பதிலளிப்பதாக ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் பாதயாத்திரையாக வருகை தந்த தேரர்களிடம் தெரிவித்தார்.
எனினும், அத்தகைய கால அவகாசத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், பதிலளிப்பதற்குத் துல்லியமான திகதியொன்றை வழங்குமாறு கோரியும் தேரர்கள் இவ்வாறு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, குறித்த இடத்தில் தற்காலிக கூடாரமொன்றை அமைப்பதற்கு முயற்சிக்கப்பட்ட வேளையில், பொலிஸாருக்கும் தேரர்களுக்கும் இடையில் சற்று பதற்றமான சூழலும் ஏற்பட்டது.
பின்னர், பொலிஸாரின் உத்தரவிற்கு அமைவாகக் கூடாரத்தை வீதியோரமாக நகர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாதயாத்திரை மூலம் வருகை தந்த தேரர்கள் உள்ளிட்ட தரப்பினர், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வருகை தந்து தமது கோரிக்கையை ஜனாதிபதி செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கையளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, தேரர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக செத் பிரித் ஓதி பாராயணங்களையும் நிகழ்த்தினர்.
தேரர்கள் தொடர்ந்தும் அந்த இடத்தில் தங்கியிருப்பதால், விசேட பொலிஸ் உத்தியோகத்தர்களின் பல குழுக்கள் அப்பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு இன்று (16) அறிக்கை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கை பரிசீலித்த நீதிமன்றம், ஜனாதிபதி செயலக வளாகத்தில் தேரர்கள் ஆர்ப்பாட்டம் செய்யவோ அல்லது அந்த வளாகத்தில் தங்கியிருக்கவோ முடியாது என உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
, உலபானே சுமங்கல தேரர் மற்றும் அவருடன் இருந்த 54 பேர் ஜனாதிபதி செயலக வளாகத்திற்குள் தங்கியிருப்பதைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.