’’நம்பிக்கையுடன் இலங்கையில் முதலிடுங்கள்”: ஜனாதிபதி அழைப்பு

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில், கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற 2026 – இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாட்டில் நேற்று முன்தினம் (12) பிற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுக் கூறினார்.

இலங்கை வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு, “மாறிவரும் உலகப் பொருளாதாரத்திற்குள் இலங்கையை நிலைநிறுத்துதல்: தாங்கும் திறன், சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதாரக் கொள்கையின் எதிர்காலம்” எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறுகிறது. இம்மாநாடு இன்றுடன் (13) நிறைவடையவுள்ளது.

அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள், வர்த்தக சமூகம் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களின் பங்கேற்புடன் நடைபெறும் இம்மாநாட்டில், நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல், ஏற்றுமதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. இலங்கையின் முதலீட்டுத் திறனை சர்வதேசத்திற்கு அறிமுகப்படுத்துவதும், நாட்டின் நீண்டகால பொருளாதார மேம்பாட்டிற்காக அரச மற்றும் தனியார் துறைக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் இம்மாநாட்டின் முக்கிய நோக்கங்களாகும்.

எழுப்பப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வழங்கிய பதில்களும்:

கேள்வி:

கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் வறுமையை ஒழிப்பதற்கும் தற்போது விசேட வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, சுமார் 05 மில்லியன் மக்கள் அஸ்வெசும பயனாளிகளாக உள்ளனர். நாம் இந்தக் குழுவை பொருளாதாரத்துடன் எவ்வாறு இணைத்துக் கொள்வது?

பதில்:

எமது முக்கிய சவால் கிராமப்புற வறுமையை ஒழிப்பதாகும். அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட உலக வங்கி அறிக்கை ஒன்றில், கிராமப்புற வறுமை 16.9% என்ற மட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு கட்டிடம் கட்டுவது அல்லது ஒரு வீதியை அமைப்பது போன்று, ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் முடிக்கக்கூடிய விடயம் அல்ல. அதற்கு இலக்கு மையப்பட்ட, தொடர்ச்சியான திட்டமிடலைக் கொண்ட ஒரு செயல்த திட்டம் தேவைப்படுகிறது.

அதேபோல், எந்தவொரு நாட்டின் அரசாங்கத்தாலும் பராமரிக்கப்பட வேண்டிய பாதுகாப்பற்ற மக்கள் பிரிவு ஒன்று உள்ளது; அதனைத் தவிர்க்க முடியாது. அனைவரும் பொருளாதார ஓட்டத்தின் பங்காளிகளாவதில்லை. எந்தவொரு நாட்டிலும் ஏதேனும் ஒரு சமூகப் பாதுகாப்பு வலையமைப்பின் மூலம் கவனிக்கப்பட வேண்டிய சமூகப் பிரிவு ஒன்று உள்ளது. இப்போது நமக்குள்ள பிரச்சினை, அந்தச் சமூகப் பிரிவு பாரிய அளவில் இருப்பதுதான். அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

கிராம மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கத் தவறியமை அதற்குரிய காரணமாக அமைந்துள்ளது. கிராம மக்களுக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார வாய்ப்புகளே உள்ளன. ஒன்று விவசாயம், கடல்சார் அல்லது நன்னீர் மீன்பிடித் தொழில், அல்லது சிறிய அளவிலான சந்தையைப் பராமரித்தல் என்பன அந்தப் பொருளாதார வாய்ப்புகளாக இருக்கின்றன. எனவே, கிராமப்புற வறுமையை ஒழிப்பதாக இருந்தால், முதலாவது சவாலாக இருப்பது, நாம் அவர்களுக்கு எவ்வாறு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கப் போகிறோம் என்பது பற்றிய விடயமாகும்.

நமது விவசாயம் நீண்ட காலமாக ஒரு வணிகப் பொருளாதாரமாக இல்லாமல், வாழ்வாதார மட்டத்திலேயே இருந்துள்ளது. எனவே, அதனை உணவுப் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தி, கிராமப்புற மக்களுக்காக புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அவர்கள் தாமாகவே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளும்போது, மூலதன வசதிகள், புதிய தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகள் இல்லாமை ஆகியவை தடையாகியுள்ளன. எனவே, இப்பணிகளை நிறைவேற்றிக் கொடுப்பதே நமது பொறுப்பாகும். நாம் ஏற்கனவே பிணையற்ற கடன் திட்டமொன்றைத் தொடங்கியுள்ளோம்.

மூலதனமும் சொத்துகளும் இல்லாத கிராமப்புற தொழில் முயற்சியாளர்களுக்காகத் தொடங்கப்பட்ட பிணையற்ற கடன் திட்டத்தின் ஊடாக, இதுவரை சுமார் 18 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டு புதிய தொழில்முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர். அத்துடன், புதிய தொழில்நுட்பம் அதனுடன் இணைக்கப்பட வேண்டும். மேலும், அரசாங்கம் ஈட்டிய வருமானம் கிராமப்புற மக்களுக்குப் பாய்ச்சப்பட வேண்டும். அங்கு நாம் இரண்டு மூலோபாயங்களைப் பின்பற்றுகிறோம்; பிரதானமாக கிராமப்புற வளர்ச்சிப் பாதை ஒன்று அவசியமாகும்.

அதற்காக இந்த முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில், சிறிய குளங்கள் மற்றும் கால்வாய்களைப் புனரமைப்பதற்காக 35 பில்லியன் ரூபாயை நாங்கள் ஒதுக்கியுள்ளோம். அதேபோல், ‘சமூக சக்தி’ கிராமப்புற வேலைத்திட்டத்திற்காக 25 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக கிராமப்புற வீதிகளுக்காக 24 பில்லியன் ரூபா உட்பட, சுமார் 100 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையானது நேரடியாக கிராமப்புற மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், கிராமத்து மக்களைக் கிராமத்திலேயே தக்கவைத்துக்கொண்டு, அபிவிருத்தி மூலோபாயத்தைக் கையாள்வதே எமது பொருளாதார உத்தியாகும். அதற்கேற்ப, கிராமத்திற்கும் நகருக்கும் இடையே துரித செய்தித் தொடர்பு கட்டமைப்பையும், மேம்பட்ட வீதி வலையமைப்பையும் உருவாக்குவதற்காக 2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இத்தகைய திட்டங்கள் மூலமாகவே கிராமப்புற வறுமைக்கான தீர்வுகளைத் தேட வேண்டும். இதில் இன்று தேடும் ஒரு தீர்வின் மூலம் நாளை பதில் கிடைத்துவிடாது. இது ஒரு நீண்டகால, தொடர்ச்சியான திட்டமிடலைக் கொண்ட செயல்முறையாகும். நாம் இதற்கான ஆரம்பப் பணிகளை ஏற்கனவே தொடங்கியுள்ளோம்.

கேள்வி:

முதலீடுகளின்போது திட்ட அனுமதிக்கான காலத்தை எவ்வாறு குறைப்பது?

பதில்:

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நாம் 2 டிரில்லியன் ரூபா மூலதனச் செலவைத் திட்டமிட்டுள்ளோம். இது கடந்த காலங்களை விட மிகப் பாரிய அதிகரிப்பாகும். 2023 இல் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட மூலதனச் செலவுகளில் 64% மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. 2024 இல் 54% செலவிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தேர்தல்களும் இயற்கை அனர்த்தங்களும் ஏற்பட்ட 2025 ஆம் ஆண்டில், அதனை 76% வரை அதிகரித்துக்கொள்ள எங்களால் முடிந்துள்ளது.

அரச பொறிமுறை எப்போதும் ஊழலில் ஈடுபடுகிறது என்றும், இந்த ஊழலைத் தடுப்பதற்குச் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும் நமது நாட்டில் ஒரு எண்ணம் இருந்தது. கடந்த காலங்களில் ஊழலைத் தடுப்பதற்காகப் படிப்படியாக உருவாக்கப்பட்ட சட்டங்கள் காரணமாக, இன்று எந்தவொரு பணியையும் விரைவாகச் செய்து கொள்ள முடியாத அளவுக்குச் சட்டங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு மாத்திரமே பழைய முறைமை உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், நாம் இனிமேலும் பொருட்களை மட்டும் வாங்குகிறோமா? நாம் மென்பொருள் கட்டமைப்பு முறை மூலமாகத் தீர்வுகளை வாங்குகிறோம். ஆனால், அத்தகைய முறைமை எங்களது கொள்முதல் நடைமுறையில் இல்லை. அதனால், எங்களது எதிர்பார்ப்பு அந்தச் சிறப்புத் துறைகளை அடையாளம் கண்டு புதிய கொள்முதல் நடைமுறையை உருவாக்குவதாகும். எனவே, புதிய கொள்முதல் முறைமையை அறிமுகப்படுத்த வேண்டிய பல சிறப்பு மற்றும் புதிய துறைகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்; நாங்கள் இது குறித்துக் கவனம் செலுத்தியுள்ளோம்.

அதேபோன்று இதற்கு முன்னர் என்ன நடந்தது என்றால், வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டு, நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்ட பின்னர்தான் கொள்முதல் நடைமுறை தொடங்கும். பெரும்பாலும் ஓகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில்தான் இந்தைக் கொள்முதல் நடவடிக்கைகள் நிறைவடையும். இப்போது நாம் அதற்குத் தீர்வு கண்டுள்ளோம். தற்போது நிதி அமைச்சின் செயலாளரால் நிதி ஒதுக்கப்படும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. அதன்படி, விலைமனுக்களைக் கோரி, வழங்குநர்களைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கலாம். உதாரணமாக, குருநாகல் – கலேவெல அதிவேகப் பாதை போன்ற திட்டங்களைக் குறிப்பிடலாம்.

அதன்படி, ஜனவரி மாதமளவில் டெண்டரை வழங்குவதற்கு நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம். அதற்கேற்ப அத்தகைய பாரிய அளவிலான பல திட்டங்களை நாங்கள் திட்டமிட்டுள்ளோம். மேலும், நாம் இ-கொள்முதல் (E-Procurement) செயல்முறைக்குச் செல்ல வேண்டும். அதுபோன்று, விசேட திறமை உடையவர்களை விசேட சம்பள அளவுகளுக்கு உட்படுத்தி, அரச சேவையிலேயே தக்கவைத்துக்கொள்ள நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன் மூலம் எம்மால் மூலதனச் செலவினங்களை 100% இற்கு அண்மித்த மட்டத்திற்குக் கொண்டுவர முடியும்.

கேள்வி:

அண்மையில் சுங்கச் சட்டங்கள், தொழில் சட்டங்கள் தொடர்பில், அரச மற்றும் தனியார் துறை கூட்டாண்மைச் சட்டங்கள், அரச நிறுவன முகாமைத்துவச் சட்டங்கள் பற்றிப் பேசினீர்கள் அல்லவா?

பதில்:

அரச நிறுவனங்கள் (SOE) பற்றிய சட்டம் இன்னும் இரண்டு வாரங்களில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன் பிறகு அதனை விரைவாக வர்த்தமானியில் வெளியிடலாம். அரச மற்றும் தனியார் துறை கூட்டாண்மைச் சட்டம் தற்போது சட்ட வரைவுக் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டு சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபரின் பரிந்துரைகளின் பின்னர் அது எமக்குக் கிடைக்கவுள்ளது. அதேபோன்று, நமது தொழில் சட்டம் சுமார் 12 சட்டங்களில் அடங்கியுள்ளது. பல்வேறு வகையான பல சட்டங்களிலும் இந்தத் தொழில் சட்டங்கள் காணப்படுகின்றன.

தற்போது தயாரிக்கப்பட்ட ஒரு சட்டம் உள்ளது. சில காலம் சென்றாலும், மிக விரைவில் அது மீண்டும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும். அதேபோன்று, சுங்கச் சட்டம் தொடர்பில் வர்த்தக சபையினால் கருத்துகள் சமர்ப்பிக்கப்பட்டதை நான் கண்டேன். சுங்கத் திணைக்களத்தின் தரப்பிலிருந்தும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நீண்ட காலத்திற்குப் பிறகு எமக்கு ஒரு உடன்பாட்டிற்கு வரக்கூடியதாகியுள்ளது. மிகவும் பொருத்தமான பரிந்துரை சுங்கச் சட்டத்தைத் திருத்துவதாகும். அது தொடர்பான முன்மொழிவுகள் தற்போது சட்ட வரைவுக் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன். அவர்கள் விரைவில் அச்சட்டத்தைத் தயாரித்துச் சமர்ப்பிப்பார்கள். பெரும்பாலும் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் இந்தச் சட்டங்கள் அனைத்தையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

கேள்வி:

சுற்றுலாத்துறை சம்பந்தமாக பிராந்திய நாடுகளின் ஊக்குவிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பேசுகிறோம். இதற்கு நமது கொள்முதல் செயல்முறை செல்வாக்கு செலுத்துகிறது என்றுதான் நீங்கள் கூறுகிறீர்களா? அதற்காக இந்த நிதியை ஒதுக்க முடியாதா?

பதில்:

ஆம். நாம் எவ்வாறு ஒரு விளம்பரத் திட்டத்தைக் கொள்முதல் செய்வது? எமது கொள்முதல் நடைமுறைப்படி ஒரு மேசையை வாங்க முடியும். ஆனால், விளம்பர ஊக்கப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டம் என்றால் என்ன? அது ஒரு கருத்து; ஒரு ஐடியா. நாம் எவ்வாறு ஒரு கருத்தைக் கொள்முதல் செய்வது? எமது கொள்முதல் நடைமுறை அதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட வேண்டும். வரலாற்றில் அது அவ்வாறுதான் செய்யப்பட்டது என்று சொல்லலாம். அது எவ்வாறு செய்யப்பட்டது? யார் அவ்வாறு செய்யப்பட்டது என்று சொல்கிறார்கள்? எது நல்லது என்று தேர்ந்தெடுப்பது அல்ல, மாறாக மற்றொரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது. அப்படியானால் இதை அளவிடுவது யார்? இது எங்கே அளவிடப்படுகிறது?

தற்பொழுது விளம்பரப்படுத்துவதற்காக சுமார் ஒன்றரை வருட காலமாக முயற்சி செய்து வருகிறோம். ஜனவரியில் டெண்டர் கோரவுள்ளதாக சுற்றுலா அதிகாரசபை கூறுகிறது. அதன்படி, அதிகாரசபை ஐந்து நாடுகளில் சிறிய அளவில் விளம்பரத் திட்டமொன்றைத் தொடங்கியுள்ளது. அத்துடன், சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வியாபார நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையொன்றும் உள்ளது. அது குறித்தும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். அவர்கள் இந்த வருடம் அழைத்து வந்த சுற்றுலாப் பயணிகளை விடக் குறிப்பிட்ட சதவிகிதத்தினரை எதிர்வரும் வருடம் அழைத்து வந்தால், அந்த இலக்கைத் தாண்டி அழைத்துவரப்படும் சுற்றுலாப் பயணிகளுக்காக சுற்றுலா அதிகாரசபையிலிருந்து குறிப்பிட்ட தொகையைச் செலுத்துவதற்குரிய நிதியை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்கிறோம்.

கேள்வி:

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. மின் கலங்களின் (பேட்டரி) கொள்ளளவை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீட்டுச் சூரிய மின் உற்பத்தி மற்றும் தனியார் துறையும் இதில் இணைக்கப்பட வேண்டும் என நாம் நம்புகிறோம். அத்தோடு, கட்டண முறைகளில் எதிர்காலத்தில் திருத்தங்களை நாம் எதிர்பார்க்கலாமா? அதேபோல், பரிமாற்றக் கட்டமைப்பு மேம்பாடு பற்றிய உங்கள் கருத்து என்ன? அதற்காக நான்கு முதல் ஐந்து பில்லியன் செலவாகும் எனக் கூறப்படுகிறதா?

பதில்:

கிளிநொச்சியிலிருந்து ஹபரணை வரை உயர் பரிமாற்றக் கட்டமைப்பை ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இலங்கை அரசு மேற்கொள்ள எதிர்பார்க்கிறது. இது தவிர புத்தளம் – வாரியபொல, ஹபரணை – வெயங்கொடை போன்ற அடையாளம் காணப்பட்ட மேலும் சில பரிமாற்றக் கட்டமைப்புகள் உள்ளன. அவற்றை தனியார் துறை ஊடாக அமைத்துக்கொள்ள நாம் திட்டமிட்டுள்ளோம். இலங்கையில் இதுவரை உள்ள அனைத்து பரிமாற்றக் கட்டமைப்புகளும் மின்சார சபையினாலேயே அமைக்கப்பட்டுள்ளன. அந்தப் பரிமாற்றக் கட்டமைப்புகளுக்காக தனியார் முதலீடுகளை ஈர்க்க எதிர்பார்ப்பு உள்ளது. அதற்காக ஏற்கனவே நாம் நான்கு மின் பரிமாற்ற வழிகளைத் (Grid lines) தேர்ந்தெடுத்துள்ளோம். அந்த நான்கிற்காகவும் மிக விரைவில் விலைமனுக் கோர உள்ளோம். அப்போது தனியார் துறைக்கும் பரிமாற்றக் கட்டமைப்பில் இணைய முடியும்.

அத்தோடு, வலுசக்தித்துறை குறித்தும் நாம் கவனம் செலுத்துகிறோம். வலுசக்தி நிலைத்தன்மை, தடையின்றி வழங்கல் என்பன முதலாவது விடயமாகும். இரண்டாவது, வலுசக்திக்காக செலவிடப்படும் தொகை. இந்த இரண்டின் மீதுதான் நமது வலுசக்திக் கொள்கை உருவாகிறது. ‘Feed-in tariff’ எனப்படும் முறையை எடுத்துக்கொண்டால், அது விலைமனு கோரல் முறையல்ல. அது PUCSL ஆல் அறிமுகப்படுத்தப்படும் ஒரு மதிப்பின்படி நாம் மின்சாரத்தைக் கொள்வனவு செய்கிறோம். நீண்ட காலமாக இந்த முறைதான் பயன்படுத்தப்படுகிறது. எனினும், வலுசக்திக் கொள்வனவு செய்வதற்கான செலவைக் குறைக்கும் இரண்டாவது மூலோபாயத்தை எடுத்துக்கொண்டால் அது தவறானது. அவ்வாறான குறிப்பிட்ட பெறுமானத்தை வழங்கி கொள்வனவு செய்வதг விட, திறந்த போட்டி விலைமனுக் கோரல் முறையில் கொள்வனவு செய்யும்போது எமக்குக் குறைந்த விலைக்குப் பெற்றுக்கொள்ள முடியும்.

நாம் பதவியேற்கும் போது மன்னாரில் மின்சாரத் திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன் ஊடாக ஒரு அலகு மின்சாரத்தை 0.822 அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்ய உடன்பாடு காணப்பட்டிருந்தது. நாம் அந்த நிறுவனத்துடன் கலந்துரையாடி 0.0500 டொலர்களுக்குக் குறைவான விலைக்கு மின்சாரத்தை வழங்குவதானால் திட்டத்தைத் தொடரத் தயார் என அறிவித்தோம். எனினும், குறித்த நிறுவனம் அந்த விலைக்கு உடன்படாததால் அந்த உடன்படிக்கை முறிந்தது.

இதன்பின்னர் இரண்டு 50 மெகாவொட் திட்டங்களுக்கு விலைமனு கோரினோம். முதலாவது 50 மெகாவொட் திட்டத்திற்கு 0.0396 அமெரிக்க டொலர் வீதமும், இரண்டாவது திட்டத்திற்கு 0.0374 அமெரிக்க டொலர் வீதமும் உற்பத்தி செய்ய முதலீட்டாளர்கள் முன்வந்தனர். இந்தப் போட்டித்தன்மைதான் எமக்குக் கூடுதலான லாபத்தைப் பெற்றுக்கொடுக்கிறது.

அதனால் நாம் ‘Feed-in tariff’ ஐ விடப் போட்டித்தன்மையின் ஊடாக எமக்குத் தேவையான உற்பத்திக் கட்டமைப்பைப் பூர்த்தி செய்துகொள்வதற்கே கவனம் செலுத்தி வருகிறோம். எமது அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு எதிரான அரசாங்கம் என்ற ஒரு கருத்து இருந்தது. நாம் பதவியேற்கும் போது சூரிய சக்தி ஊடாக 1400 மெகாவொட் தான் மின்சாரம் உற்பத்தியானது. எனினும் இந்த இரண்டு வருடங்களுக்குள் புதிதாக 1500 மெகாவொட் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 1100 மெகாவொட் திட்டங்களை முன்னெடுக்க நாம் ஒப்பந்தம் செய்துள்ளோம். அடுத்த வருடமளவில் அது நிறைவடைகிறது. நமது அரசாங்கத்தின் கீழ் புதிதாக 2600 மெகாவொட் சூரிய மின் சக்தி உற்பத்தியாகிறது.

பொதுவாக ஒரு மெகாவொட் சூரிய சக்தி திட்டமொன்றை அமைப்பதற்கு மூன்றரை ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. எங்களைப் போன்ற சிறிய நாட்டில் அந்த அளவு நிலப்பரப்பை ஒரு சூரிய சக்தி திட்டம் அமைப்பதற்கு ஒதுக்குவது தொடர்பில் சிக்கல் உள்ளது. அதனால்தான் நீர்த்தேக்கங்களில் மிதக்கும் சூரியசக்தி கட்டமைப்புகள் குறித்த கருத்தின்படி, இப்பன்கட்டுவையில் ஐந்து மெகாவொட் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பன்கட்டுவையின் முழு நீர்த்தேக்கமும் 1000 ஏக்கராகும். நமக்கு ஐந்து மெகாவொட்டை உற்பத்தி செய்வதற்கு 10 ஏக்கரே தேவைப்பட்டது; அதாவது நீர்த்தேக்கம் ஒன்றிலிருந்து 1 வீதத்தை ஒதுக்கித்தான் நாம் இப்பன்கட்டுவையில் 5 மெகாவொட் திட்டத்தை உருவாக்கினோம். மிதக்கும் சூரிய சக்தி கட்டமைப்பு குறித்தே நாம் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.

தற்போது நாம் ரந்தெனிகலவில் மற்றொரு திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். EIA மற்றும் உற்பத்திக் கட்டமைப்பை உருவாக்குதல் ஆகிய இரண்டும் தனியார் துறைக்கு வழங்க எதிர்பார்க்கிறோம். அத்தோடு மொரகஹகந்த, சமனலவெவ, சந்திரிகா வெவ உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பல நீர்த்தேக்கங்களிலும் நாம் மிதக்கும் சூரிய சக்தி கட்டமைப்புகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம். ஏனெனில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி நோக்கிச் செல்வதற்கு நமக்குத் தேவையுள்ளது. அனைத்துப் பொருட்களையும் எம்மால் சேமித்துக்கொள்ள முடியும். எனினும், மின்சாரத்தில் நாம் முகங்கொடுக்கும் முக்கிய பிரச்சினை சேமிப்பு தொடர்பான பிரச்சினையாகும். சூரிய சக்தி ஊடாகப் பகல் வேளையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் பகல் வேளையில் நமக்குக் கொள்ளளவு அதிகரிக்கிறது. இதனால் சில கொள்வனவுகளை நாம் துண்டிக்க வேண்டியிருந்தது. நாம் பகல் வேளையில் உற்பத்தி செய்யும் சூரிய சக்தி மின்சாரத்தை சேமித்து இரவில் பயன்படுத்த வேண்டும். அதற்காக நாம் தற்போது 160 மெகாவொட் திட்டத்திற்கு விலைமனு கோரியுள்ளோம்.

நவம்பர் மாதமளவில் 13 உருவாக்கப்பட்டு முடியும் என நினைக்கிறேன். 250 மின்கல திட்டங்களுக்கும் விலைமனு கோரப்பட்டுள்ளது. தற்போது அது தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. மதிப்பீடுகளின்படி, இந்த 250 இல் நாம் 160 மெகாவொட் மின்கலங்களுக்கு விலைமனு கோருவதை விட 10 வீதம் குறைந்த விலை காணப்படுகிறது. தற்போது இருக்கும் சூரிய கலன் உரிமையுள்ளவர்களுக்கே மேலும் 150 மெகாவொட் திட்டங்களை வழங்க எதிர்பார்க்கிறோம்.

அத்தோடு வீட்டுத் கூரைகளில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி திட்டங்கள் தொடர்பில் சிக்கல் உள்ளது. ஒரு மெகாவொட்டுக்கு அதிகமான சூரிய கலன்களுக்கே நாம் வரிச்சலுகை வழங்குகிறோம். அதற்குக் குறைவான சூரிய கலன்களுக்கு வரி அறிவிடப்படுகிறது. அதனால் அவர்கள் மனந்தளர்கிறார்கள். மெகாவொட்டுக்குக் குறைந்தவர்களுக்கு வரிச்சலுகை வழங்க முடியுமா என நாம் ஆராய்ந்தோம். சூரிய சக்தி மின்சாரத்தை சேமித்துக்கொள்வதற்காகப் பயன்படுத்தும் சூரிய கலன்களையும், மற்றைய கலன்களையும் நாம் தொழில்நுட்ப ரீதியில் எவ்வாறு அடையாளம் காண்பது என்பது தொடர்பில் தொழில்நுட்பச் சிக்கல் உள்ளது.

அந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். இப்போது முழு உற்பத்தித் கொள்ளளவில் 69 வீதம் இருப்பது புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கொள்ளளவாகும்.

கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு ஒரு லீற்றர் டீசலைக் கூட நாம் பயன்படுத்தவில்லை. அதனால் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறைக்கு இந்தப் பயணம் மிக வெற்றிகரமானதாக உள்ளது; அது பாரிய வெற்றியாக அமையும். தடையற்ற வலுசக்தி விநியோகத்தையும், நியாயமான விலையில் வலுசக்தியை வழங்குவதையுமே நாம் எதிர்பார்க்கிறோம். நாம் அந்த இரண்டு கோட்பாடுகளின் அடிப்படையில்தான் செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

கேள்வி:

சிங்கப்பூர் போன்ற நாட்டில் தேசிய வருமானத்திற்குத் துறைமுக வருமானத்திலிருந்து 7%-8% வீதமளவிலான பங்களிப்பு கிடைக்கிறது. எனினும், இலங்கையில் தற்போதும் கிடைப்பது 2%-3% வீத பங்களிப்பு மட்டுமே?

பதில்:

நமது பொருளாதார மூலோபாயத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகத் துறைமுகம் திகழ்கிறது. தற்போது துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமாக கிழக்கு முனையம் உள்ளது. இந்த முனையத்திலிருந்து சுமார் 0.5 மில்லியன் அளவிலான கொள்கலன்களின் பரிமாற்றம் நடைபெறுகிறது. எனினும், கிழக்கு இறங்குதுறையில் 3.2 மில்லியன் கொள்கலன்களைக் கையாளுவதற்கான திறன் உள்ளது. அவ்வாறானால் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் இந்த வளத்திலிருந்து நாம் உச்ச நன்மையைப் பெற்றுக்கொள்வதில்லை. அதனால், மேலும் கிழக்கு முனையத்தைக் கையாளும் பணியை அரசாங்கத்தினால் மாத்திரம் தனியாகச் செய்ய முடியும் என நான் நம்பவில்லை. அதனால், முனையத்தின் உரிமையை அரசிடம் வைத்துக்கொண்டு, முகாமைத்துவத்திற்காக நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்து, அதன் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

சர்வதேச ரீதியில் பலமான கப்பல் நிறுவனங்கள் பல கிழக்கு இறங்குதுறையின் முகாமைத்துவம் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றன. அடுத்ததாக மேற்கு முனையத்தின் இரண்டாம் கட்டம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். அங்கு அலைதடுப்பு அமைக்க வேண்டும். அதற்கான மதிப்பீடு முன்னர் 1.1 பில்லியன் டொலர்களாகும். தற்போது அதற்கு 1.4 பில்லியன் டொலர்கள் செலவாகிறது. அந்தச் செலவை ஏற்று மேற்கு முனையத்தின் அலைதடுப்பை அமைத்துக்கொண்டால் அங்கும் எம்மால் 3.2 மில்லியன் கொள்கலன் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான பூர்வாங்க ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக நிதி ஒதுக்கப்படும். ஏற்கனவே ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து சாத்தியவள ஆய்வு அறிக்கை தயாரிக்கப்படுகிறது. டிசம்பர் மாதமளவில் இடைக்கால அறிக்கையையும், எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் முழுமையான அறிக்கையையும் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. நாம் முனையக் கட்டமைப்பை மேம்படுத்த எதிர்பார்க்கிறோம்.

துறைமுகத்திலிருந்து வெறுமனே கொள்கலன் பரிமாற்றம் மட்டுமா செய்யப்படுகிறது? அதற்கு அப்பால் எம்மால் எதையும் செய்ய முடியாதா? என நாம் சிந்திக்க வேண்டும். அங்கு எமக்குத் துறைமுக விநியோக மையமாக மேம்படுத்த முடியும். நீண்டகாலமாக அதற்காக விலைமனு கோரப்பட்டுப் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன. வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதோடு, தற்போது அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, நிறுவனங்களுக்குரிய நஷ்டஈட்டுத் தொகையைச் செலுத்தி அதனை முடிவுக்குக் கொண்டுவர உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

துறைமுகத்திற்குள்ளே கொள்கலன் நெரிசலைக் குறைப்பதற்காகக் கெரவலப்பிட்டியில் வளாகம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Bunkering இலும் வரி குறித்த பிரச்சினை எழுந்துள்ளது. நாம் அது குறித்தும் பரிசீலித்து, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதற்குச் சலுகையை வழங்க எதிர்பார்க்கிறோம். இது சர்வதேச வர்த்தகம் என்பதால் சர்வதேசத் தரங்களுக்கு உட்பட்டே வரி அறவிடல் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கேள்வி:

புதிய தொழில் வகைக்குள் உள்ளடங்கும் பிக் டேட்டா (Big Data), ஏ.ஐ. (AI), குவாண்டம் கணினி (Quantum Computing), ப்ளொக் செயின் (Blockchain) போன்றவைகள் உள்ளடங்கிய துறையில் கடந்த காலத்தில் போதிய பணியாளர் இல்லா பிரச்சனை காணப்பட்டது. தற்பொழுது வருடத்திற்கு அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களிலிருந்து 17,000 பேர் இத்துறைக்குள் இணைகிறார்கள். இருந்தாலும் இந்தத் துறையில் போதுமான வேலைவாய்ப்புகள் இல்லை. இது இலங்கையில் மட்டும் உள்ள பிரச்சினையல்ல. இந்த நிலையில் தொழில்நுட்பத் துறையை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்?

பதில்:

உண்மையான பிரச்சினை என்னவென்றால், நாம் உருவாக்கும் திறமைசார் தொழில்படை மத்திய மட்டத்திலேயே உள்ளது. வேலைவாய்ப்பு நெருக்கடி இந்த நிலையில்தான் உருவாகியுள்ளது. அங்கிருந்து உயர் துறைக்குச் சென்றால் வேலைவாய்ப்புகள் மேலும் வளர்ச்சி அடையும். துறைசார் வேலைவாய்ப்புகள் பெருமளவில் வளர்ச்சி அடைகின்றன. வர்த்தகத் துறையை எடுத்துக்கொண்டாலும் உள்நாட்டுத் தொழில்துறைக்கு நிபுணர்களின் தேவை உள்ளது. நாம் முழுமையாக இந்தக் கட்டமைப்பை மாற்றினால் அந்த மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என நான் நினைக்கிறேன். இது தொடர்பான சவால் எமக்குள்ளது.

நாம் AI பயிற்சி மையம் ஒன்று குறித்துக் கவனம் செலுத்தியுள்ளோம். அடுத்த வாரம் சிங்கப்பூருடன் இணைந்து விஜேராமவில் AI மையம் ஒன்றை ஸ்தாபிக்க நாம் எதிர்பார்க்கிறோம். அதனுடன் தொடர்புடைய அமைச்சரவைப் பத்திரத்தை அடுத்த வாரம் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

இந்தத் திறனை மேலும் உயர்த்திச் சென்றுதான் நாம் இந்த நெருக்கடிக்குத் தீர்வு காணவேண்டிவரும். அத்துடன் BPO போன்ற நிறுவனங்களுடன் எவ்வாறு ஒன்லைன் வேலை செய்யும் முறையை மேலும் அதிகரிப்பது, சர்வதேச வாய்ப்பை உருவாக்கிக்கொள்வது உள்ளிட்ட பல துறைகள் குறித்து நாம் கவனம் செலுத்தியுள்ளோம். அதன் மூலம் இதற்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பட்டப் படிப்புகள் கூட மேலும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆரம்பத்தில் நமக்குத் தேவையாக இருக்கும் IT இன்ஜினியர் இதுதான். எனினும், IT துறை தற்பொழுது பாரியளவில் வளர்ச்சி அடைவதற்குச் சாதகமாக நமக்குத் தேவையான திறமையைக் கொண்ட பட்டதாரியை உருவாக்குவதற்கு நாம் தவறிவிட்டோம். அதனால் நமது IT துறை இரண்டு மூன்று மடங்கு முன்னேற்றம் காண வேண்டும். அதுதான் எமக்கிருக்கும் ஒரே தீர்வாகும்.

கேள்வி:

ஜனாதிபதி அவர்களே, மத்திய கிழக்கு நெருக்கடியுடன் நமக்கு ஏற்பட்ட சவால்களுக்கு மத்தியில், தற்போது டீசலுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய கிழக்குப் போர் மேலும் நீடித்தால், நாம் இரண்டு வருடங்கள் வரை இந்த மானியத்தை வழங்குவோமா? அல்லது இலக்கு வைக்கப்பட்ட பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை நோக்கி நகர்வோமா?

பதில்:

மத்திய கிழக்குப் போர் தொடங்கிய பின்னர் நாம் முகம் கொடுத்த மிக முக்கிய சவால், எரிபொருள், மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிசக்தி விநியோகத்தைத் தடங்கலின்றி இடையறாது பேணிச் செல்வதாகும். உலகின் பல நாடுகளில் இந்த இடையறாத நிலை உடைந்ததால் சமூக அமைதியின்மை நிலை ஏற்பட்டது. ஆனால், நாம் அந்த இடையறாத தொடர்ச்சியை உறுதிப்படுத்த வெற்றிகரமாக நடவடிக்கை எடுத்தோம். இப்போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை எந்தவொரு குறியீட்டினாலும் முன்னறிவிக்க முடியாது.

பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் வியாபாரங்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டெழும் நமது பொருளாதாரத்திற்கும் சமூக வாழ்க்கைக்கும் மேலும் ஒரு பெரிய அதிர்ச்சியைத் தாங்க முடியாது என்பதனாலேயே நாம் ‘டித்வா’ மானியப் பொதியை வழங்கினோம். இதன் விளைவாக, முதல் காலாண்டில் 5.2% பொருளாதார வளர்ச்சியை எம்மால் அடைய முடிந்தது.

முதல் ஐந்து மாதங்களில் ஒரு லீட்டர் டீசலுக்கு 100 ரூபாயும், ஒரு லீட்டர் பெற்றோலுக்கு 20 ரூபாயும் மானியமாக வழங்க 60 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது. செப்டம்பர் மாதத்தில் மானியம் வழங்கப்படாதபோதிலும், மீண்டும் நிலைமை தீவிரமடைந்ததால் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் வரை ஒரு லீட்டர் டீசலுக்கு 70 ரூபாய் மானியம் வழங்கப்படுவதுடன், இதற்காக 41 பில்லியன் ரூபாய் செலவாகும்.

மானிய வழங்குதலானது விவசாயத்திற்குப் பயன்படும் டிராக்டர் அல்லது பாண் விநியோகிக்கும் வியாபாரி போன்ற இலக்கு வைக்கப்பட்ட சமூகத்தையே சென்றடைய வேண்டும். எனினும், நேரடி தரவு கட்டமைப்பில் உள்ள பலவீனம் காரணமாக ஒட்டுமொத்த மானியத்தையும் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் டயலொக் மற்றும் மொபிடெல் நிறுவனங்களுடன் கலந்துரையாடி, இலக்கு வைக்கப்பட்ட சமூகத்திற்கு மட்டும் மானியத்தை வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்படும்.

தனியார் துறையை போட்டித்தன்மைக்கு அழைத்தபோதிலும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) வழங்கும் விலைக்கு எரிபொருளை வழங்க தனியார் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. CPC நிறுவனம் 28 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டி, அந்த இலாபத்தின் ஒரு பகுதியை மக்களுக்கு நிவாரணமாக வழங்க தயாராக உள்ளபோதிலும், தனியார் நிறுவனங்கள் எரிபொருளைக் களஞ்சியங்களில் வைத்துக்கொண்டு விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளன. ஒரு லீட்டர் டீசலில் 132 ரூபாய் விலை வித்தியாசத்தை மக்கள் மீது சுமத்துவது நியாயமற்றது.

எனவே, தனியார் நிறுவனங்கள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ள பிரதேசங்களில் உள்ள மக்களுக்காக CPC ஊடாகப் புதிதாக 75 பெட்ரோல் நிரப்பு நிலையங்களை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளோம். நாட்டின் சமூக மற்றும் பொருளாதார இருப்பைப் பாதிக்கும் எரிசக்தி துறையை நிச்சயமற்ற நிலைக்கு உட்படுத்தவோ அல்லது எரிபொருள் விநியோகத்தை நிறுத்தவோ எந்தவொரு நிறுவனத்திற்கும் உரிமையில்லை. தனியார் தொழில்முனைவோருக்கு இலாபத்தைப் போலவே சமூக நீதியைப் பற்றிய உணர்வும் இருக்க வேண்டும்.

கேள்வி:

அரசாங்கம் சர்வதேச நாணய நிதிய (IMF) திட்டத்தின் இறுதி ஆறு மாதங்களுக்கு வந்துள்ளது. கடன் மறுசீரமைப்பிற்குப் பிறகு இத்திட்டத்திற்குச் சென்றதால் பல நன்மைகள் கிடைத்தபோதிலும், எதிர்காலத்தில் புதிய IMF திட்டத்திற்குச் செல்வது குறித்து அரசாங்கத்தின் கருத்து என்ன?

பதில்:

தரப்படுத்தல்களில் (Ratings) முன்னேற்றம் அடைந்தபோதிலும், வெளிநாட்டு கையிருப்பை எதிர்பார்க்கப்பட்ட மட்டத்திற்கு மேலும் உயர்த்த வேண்டியுள்ளது. இந்த காரணிகளைப் பூர்த்தி செய்ய முடிந்தால் நம்மால் முன்னோக்கிச் செல்ல முடியும். எனினும், உலகில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக எரிபொருள் இறக்குமதி செலவு கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு எரிபொருள் இறக்குமதி செலவு 4,042 மில்லியன் டொலர்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மட்டும் அது 4,082 மில்லியன் டொலர்கள் வரை உயர்ந்துள்ளது. இந்தப் போக்கின்படி, ஆண்டின் இறுதியில் எரிபொருளுக்காக சுமார் 6 பில்லியன் டொலர்கள் வரை செலவாகக்கூடும். இது பொருளாதாரத்திற்குப் பாரிய சவாலாக அமையும்.

IMF உடனான முதல் 4 ஆண்டுகளுக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் முதன்மை இலக்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதாகும். அந்த ஸ்திரத்தன்மை வெற்றிகரமாக அடையப்பட்டுள்ளதுடன், அடுத்த கட்டம் அந்த ஸ்திரத்தன்பையைப் பாதுகாத்துக்கொண்டு பொருளாதார வளர்ச்சியை எட்டுவதாகும். அந்த வளர்ச்சிக்காக ஒரு புதிய உடன்படிக்கைக்குச் செல்ல முடிந்தால், நாம் அதற்குத் தயாராக இருக்கிறோம்.

அரசாங்கத்தின் பொருளாதார தொலைநோக்குப் பார்வைக்கும் IMF உடன்பாடுகளுக்கும் இடையே பாரிய முரண்பாடுகள் இல்லாததால், மோதல்கள் இன்றி 4 வருடத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடிந்தது. அடுத்த கட்ட திட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து நிதியமைச்சு, மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட பொருளாதார நிபுணர்கள் குழு கலந்துரையாடி வருகிறது. மீதமுள்ள ஆறு மாத காலப்பகுதியில் வெளிப்புற பொருளாதார அழுத்தங்களைக் கொண்டு பொருத்தமான தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

கேள்வி:

இங்கே வெளிநாட்டு முதலீட்டாளர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள், நமது வணிக சமூகம், வர்த்தக சம்மேளன உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் உள்ளனர். நீங்கள் எங்களுக்கு வழங்கும் இறுதிச் செய்தி என்ன?

பதில்:

நாட்டிற்குள் தேவையான வெளிப்படைத்தன்மையை நாம் உருவாக்கியுள்ளோம்; அதுவே முதல் படியாகும். இரண்டாவது படியாக, முதலீடு மற்றும் வர்த்தக பாதுகாப்புக்குத் தேவையான சட்ட விதிமுறைகளைத் தயாரிக்கும் பணி கணிசமான அளவில் இறுதிப் கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், முதலீடுகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும் நாம் மேம்படுத்தி வருகிறோம்.

வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துதல், சட்ட விதிமுறைகளை நிறைவேற்றுதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் ஆகியவையே அரசாங்கத்திற்கு உரித்தான பணிகளாகும். எனவே, நாம் நமது பங்களிப்பைச் செய்கிறோம்; நீங்கள் உங்கள் பங்களிப்பைச் செய்யுங்கள். கடந்த காலங்களில் S-VAT நீக்கப்பட்டமை தொடர்பாக சில சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்தன. இருப்பினும், S-VAT காரணமாக மாதத்திற்கு 10 பில்லியன் ரூபாய் கசிவு ஏற்பட்டு வந்ததுடன், அதனை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.

இலங்கைக்குள் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் முதன்மை சர்வதேச நிறுவனங்களுடன் வெற்றிகரமாக இணையக்கூடிய வலுவான உள்நாட்டு வர்த்தக குழுவையும் தொழில்முனைவோரையும் உருவாக்க நாம் விரும்புகிறோம். நமது வரவு செலவுத் திட்டத்திலும் அது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களுக்குச் செல்வதாக இருந்தால், காணிகள் மற்றும் சில சேவைகளுக்கு நிவாரண முறைகளை வழங்கத் தயாராக உள்ளோம்.

அத்துடன் துறைமுகம், புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறை, கொழும்பு துறைமுக நகரம் (Port City) மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல துறைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சி அடைந்து புதிய பொருளாதார வாய்ப்புகள் உருவாகின்றன. நீங்கள் அனைவரும் பயமின்றி முதலீடு செய்யுங்கள். அதற்குத் தேவையான பாதுகாப்பையும் நம்பிக்கையையும் நாங்கள் வழங்குவோம். இறுதியாக உங்களிடம் விடுக்கப்படும் கோரிக்கை இதுவேயாகும். மிக்க நன்றி!

Leave a Reply